20 Nov 2015

சைக்கோக்கள் எங்கும் இருக்கிறார்கள்


வட இந்தியர்களுக்கென்று பல மொழிகளிருந்தாலும், இந்தியை தூக்கி பிடித்து, இங்கிருந்து அங்கு செல்லும் ஹிந்தி தெறியாத தென்னிந்தியர்களை, அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஏன்? பலரும் அங்கு இவ்வாறு சைக்கோக்கள் போல் நடந்துகொள்கிறார்களென்று பல முறை யோசித்தது உண்டு.

சில நாட்களுக்கு முன் பதில் கிடைத்தது, அது யாதெனின், அங்கு மட்டுமல்ல சைக்கோக்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பதே!. எங்கள் அலுவலகம் இருக்குமிடங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டியவாறே இருக்கின்றனர், அங்கெல்லாம் வேலை செய்வது வட இந்தியர்கள் மட்டுமே, அவர்கள் பேசுவது ஹிந்தியா இல்லை வேறெதும் மொழியா என தெறியவில்லை. சிலர் அவர்கள் வேலை செய்யும் கட்டிடத்திலேயே தங்கியும், சிலர் வேறெங்கிருந்தோ தினமும் பஸ்சில் வந்தும் வேலை செய்கின்றனர்.

தினமும் பஸ்ஸில் வரும்போதும், போகும்போதும் அவர்கள் படும் அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒருமுறை இரண்டு வட இந்தியர்கள் 22ரூபாய் டிக்கெட்டுக்கு முப்பது ரூபாய் கொடுத்தனர், வழக்கம்போலவே சலித்துக்கொண்டே "ரெண்டு ரூவா சில்லற கொடு" என அந்த கண்டக்டர் சொல்ல அவர்கள், சைகையால் இல்லை என்றனர் அவ்வளவுதான், யாருமே எதிர்பார்க்கவில்லை அந்த கண்டெக்டர் வசை மொழிகளில் கண்டபடி திட்ட ஆரம்பித்தார், ஹிந்தியிலேயே ஒரு கெட்ட வார்த்தையையும் சேர்த்து, "எருமமாடு, சில்ற இல்லாம என்ன மயிருக்குடா பஸ்ஸுல ஏறுரிங்க, பாஷ தெரியாதுன்னா மூஞ்சிலயே குத்திட்வேன்"னு திட்டிவிட்டு மீதம் கொடுக்காமலே அடுத்த இடத்திற்கு நகர்ந்துவிட்டார்.

எதோ சொல்லி அவமானப்படுத்தப்படுகிறோம், ஆனால் என்னவென்று தெரியாததாலும், அந்நிய இடத்தில் எதிர்த்து எதுவும் பேசமுடியாது என்பதாலும், முகத்தை தொங்க போட்டுகொண்டனர். அனைத்தையும் பார்த்துகொண்டிருந்த நான் உட்பட எவருமே அந்த கண்டக்டரை எதுவுமே கேட்கவில்லை. எங்களுக்கும் சென்னை அந்நிய இடமாக இருந்தது உண்மைதான். ஒரு இரண்டு ரூபாய் தான் என்னால் அவர்களுக்கு கொடுக்க முடிந்தது. இருவரில் ஒருவர் கண்டக்டரிடம் சென்று இரண்டு ரூபாயை கொடுத்து மீத பைசாவை கேட்க மீண்டும் திட்ட ஆரம்பித்தார், அதே ஹிந்தி கெட்ட வார்த்தையை சேர்த்து "இப்போ மட்டும் எங்கேருந்து காசு வந்துச்சு!" என்றார்.

எல்லாத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சென்னைவாசி ஒருவர், "உனக்கு தேவை சில்ற தானையா!, வாங்கிகிட்டு மீதிய கொடு, சில்ற இல்லையான்னு அவன கேட்ட வார்த்தைய இங்க நிக்கிற வேற ஆள கேட்டு திட்டு பாக்கலாம்! பாஷ தெரியாதுன்ன ஏறி மிதிக்க வேண்டியது, நம்ம ஆளுங்களையும் இப்டிதானய்யா அங்க திட்டுவானுங்க, ஒழுங்கா மரியாதையா நடந்துக்கோ இல்லனா பஸ்ஸு ஏரியா தாண்டாது!!"னு சொல்லி இறங்கிட்டாரு. வண்டி எடுத்த அப்புறம், "வந்துட்டானுங்க மயிருமாறி"னு சொல்லி தன் இயலாமையை காட்டிகொண்டார்.

இது போன்ற ஆட்களுக்கெல்லாம் எவ்வளவு அழகாக வகுப்பெடுத்தாலும், இன்னொருவனையும் மனுசனா பாக்கணும்ன்ற எண்ணமெல்லாம் வரவே வராது, இது போல சைக்கோக்கள் இங்கும் அங்கும் மட்டுமல்ல, எங்கும் இருக்கிறார்கள். வேற்றுகிரகவாசிகள் இங்கு வந்தால் அவர்களுடன் சம்பந்தம் பேச அனைத்து தகுதிகளும் உடையவர்கள் இவர்கள்! அவர்கள் பூமிக்கு வந்தால் கூடவே இதுபோன்றோரையும் அனுப்பி வைக்கவேண்டும், அவர்களுக்கு பேச்சுத்துணையாக இருக்கும்!