21 Jul 2017

நண்பேன்


பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்த சமயம், நீ வாங்கின மார்க்குக்கு கூடவெல்லாம் வந்து காலேஜ்ல சீட்டு கேக்க முடியாது நீங்களே எதாவது ஒரு காலேஜ்ல போயி ஃபார்மெல்லாம் வாங்கி போட்டுகோங்க, சீட்டு கெடச்சுதுன்னா வந்து சொல்லுங்க ஃபீசு பணம் மட்டும் கொடுக்குறோம் என்று வீட்டில் சொல்லிருந்தார்கள்.
.
நானும் என் நன்பனொருவனும் திருச்சியில் ஜோசப், ஜமால், பிஷப் அப்புறம் நேஷனல் என்று ஒவ்வொரு காலேஜாக போகலாமென்று முடிவு பண்ணியிருந்தோம். முதலாவதாக நாங்கள் ஃபார்ம் வாங்கச்சென்ற காலெஜ் ஜோசப், மெயின் கேட்டிலிருந்து ஒரு நூறு இருநூறு மீட்டர் தாண்டியதும் நாங்கள் முதலில் பார்த்தது அந்த காலேஜின் டாய்லெட். பார்த்துவிட்டு பக்கத்திலிருந்தவனை பார்த்தால் ஆளை காணவில்லை, வினாடி நேரத்திலேயே அந்த டாய்லெட்டின் வாசல்வரை சென்றிருந்தான்.
.
உள்ளே சென்று ஓரிரண்டு நிமிடம் கடந்து வெளியே வந்தவனிடம் ஏண்டா அவ்ளோ அர்ஜெண்டா? என கேட்கலாமென்றிருந்தேன். ஆனால் அதற்கு முன்னமாக, வந்த மறுகணமே 'அப்பாடா அப்துல் கலாம் ஒன்னுக்கு போன டாய்லெட்ல நானும் ஒன்னுக்கு போயிட்டேண்டா!!' என்றான், ஒருநிமிடம் புல்லரித்துவிட்டது. இன்று அவன் போன்ற நண்பர்கள் அருகில் இல்லாததாலோ என்னவோ வாழ்கை தேமேவென நகர்கிறது. 

14 Jul 2017

பல்சர் 220

அது ஒரு பல்சர் 220, ஒரு 60கிமி வேகமிருக்கும் அன்றும் என்னை கடந்துசென்றது, ஏற்கனவே ஒருமுறை ஓ.எம்.ஆரிலும், ஒருமுறை பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் ரோட்டிலும் பார்த்திருக்கிறேன். பேக் ச்சேஸிலிருக்கும் ஃபெண்டர் நீக்கப்பட்டிருக்கும். ஒரிஜினலாகவே அந்த வண்டிக்கு தனியாக மட் குவார்ட் இல்லாததாலும், கூடவே இந்த ஃபெண்டர் நீக்கப்பட்டிருப்பதாலும் எப்போது பார்த்தாலும் சட்டென கவனத்தை ஈர்த்துவிடும். கூடவே அந்த பல்சருக்கே உரித்தான அந்த தடித்த சைலன்சரும் அதன் பின்புறத்தை இன்னும் பிரமாண்டமாக காட்டும். வெறும் பெயருக்காக சின்னதொரு நம்பர் பிளேட் மாட்டப்பட்டிருக்கும். அந்த வண்டியில் செல்பவனை பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அடுத்தடுத்து வண்டிகளை கட் செய்து போகையில் பார்க்க ஒரு விதமாய் அம்சமாய் இருக்கும்.

எனக்கும்தான் அதுபோல சின்னதொரு மோட் செய்து ஓட்டவேண்டுமென்றுதான் ஆசை. ஆனால் இந்த மழைக்காலத்தை பார்த்துதான் பயம், வண்டிக்கு பின் வருபவரின் முகத்தில் சேற்றை வாரியடிக்க விருப்பமில்லை. உண்மையாக இதுபோன்ற சின்ன சின்ன மோடிஃபிகேஷன்களை செய்ய நினைக்கையில்தான் நம்மூரின் சாலைகளை எண்ணி கோபம் வரும். மட் குவார்டை நீக்குவதற்காவது இப்படிச்சில சங்கடங்கள் இருக்கிறது, ஆனால் இந்த சாரி குவார்ட் என்கிற ஒரு வஸ்து இருக்கிறதல்லவா? அது மோசம்!. அது இருப்பதிலும் எந்த உபயோகமுமில்லை, அதை எடுப்பதிலும் எந்த சங்கடமுமில்லை, ஆனாலும் நிரந்தரமாய் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது

2 Jul 2017

ஜி

கொஞ்சம் வருசம் முன்னால எம்.எல்.எம் மார்கெட்டிங் பயங்கரமா இருந்தப்போ 'யூ கேன் வின்' போன்ற புத்தகங்கள வாங்கி வச்சுகிட்டு, எப்டியாச்சும் வாழ்க்கைல பெருசா சம்பாரிக்கனும்னு எதாவது ஒரு எம்.எல்.எம் கம்பெனில பொருளவாங்கிட்டு இல்லனா பணத்தகட்டிட்டு, நமக்குகீழ யாரயாவது சேத்து விட்டுடனும்னு சில அன்பர்கள் பித்து பிடித்தது போல் திரிந்துகொண்டிருந்தார்கள்.

மதியம் ரெண்டு மணியானாலும் சரி, சாயங்காலம் ஆறு மணியானாலும் சரி, ராத்திரி ஒன்பது மணியானாலும் சரி இன்னும் எந்த நேரமானாலும் ஃபோன் செய்து "ஜி குட்மார்னிங் ஜி.." என ஆரம்பிப்பார்கள். இப்போ என்ன டைம் ஆகுது, ஏங்க இப்டி குட்மார்னிங் சொல்லுறிங்கனு கேட்டா குட்மார்னிங்'ன்ற வார்த்தைல ஒரு எனர்ஜி இருக்கு ஜி என்பார்கள், கூடவே ஜி எப்பொ ஜி செஸ்ஷன் வர்ரீங்க? என்பார்கள். கெட்டவார்த்தைகள் பேசக்கூடாது என்பதால் மூடிக்கொண்டிருந்த காலம் அது.

இந்த 'ஜி'ன்ற வார்த்தையை என்னோட கெட்டவார்த்தை அகராதியில் சேர்த்ததற்க்கு ஆர்.எஸ்.எஸ் சங்கிக்கள் தவிர்த்து, இந்த எம்.எல்.எம் மங்கிக்களும் ஒரு காரணம்!