14 Jul 2017

பல்சர் 220

அது ஒரு பல்சர் 220, ஒரு 60கிமி வேகமிருக்கும் அன்றும் என்னை கடந்துசென்றது, ஏற்கனவே ஒருமுறை ஓ.எம்.ஆரிலும், ஒருமுறை பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் ரோட்டிலும் பார்த்திருக்கிறேன். பேக் ச்சேஸிலிருக்கும் ஃபெண்டர் நீக்கப்பட்டிருக்கும். ஒரிஜினலாகவே அந்த வண்டிக்கு தனியாக மட் குவார்ட் இல்லாததாலும், கூடவே இந்த ஃபெண்டர் நீக்கப்பட்டிருப்பதாலும் எப்போது பார்த்தாலும் சட்டென கவனத்தை ஈர்த்துவிடும். கூடவே அந்த பல்சருக்கே உரித்தான அந்த தடித்த சைலன்சரும் அதன் பின்புறத்தை இன்னும் பிரமாண்டமாக காட்டும். வெறும் பெயருக்காக சின்னதொரு நம்பர் பிளேட் மாட்டப்பட்டிருக்கும். அந்த வண்டியில் செல்பவனை பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அடுத்தடுத்து வண்டிகளை கட் செய்து போகையில் பார்க்க ஒரு விதமாய் அம்சமாய் இருக்கும்.

எனக்கும்தான் அதுபோல சின்னதொரு மோட் செய்து ஓட்டவேண்டுமென்றுதான் ஆசை. ஆனால் இந்த மழைக்காலத்தை பார்த்துதான் பயம், வண்டிக்கு பின் வருபவரின் முகத்தில் சேற்றை வாரியடிக்க விருப்பமில்லை. உண்மையாக இதுபோன்ற சின்ன சின்ன மோடிஃபிகேஷன்களை செய்ய நினைக்கையில்தான் நம்மூரின் சாலைகளை எண்ணி கோபம் வரும். மட் குவார்டை நீக்குவதற்காவது இப்படிச்சில சங்கடங்கள் இருக்கிறது, ஆனால் இந்த சாரி குவார்ட் என்கிற ஒரு வஸ்து இருக்கிறதல்லவா? அது மோசம்!. அது இருப்பதிலும் எந்த உபயோகமுமில்லை, அதை எடுப்பதிலும் எந்த சங்கடமுமில்லை, ஆனாலும் நிரந்தரமாய் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது

No comments:

Post a Comment