15 Mar 2017

பீச்சாங்கை


இரவு நேரங்களில் எவருக்கும் தன் பைக்கில் லிஃப்ட் கொடுத்து பழக்கமில்லை அவனுக்கு. நைட் ஷிஃப்டில் வேலைக்குச்செல்வதால், வழக்கம் போலவே இரவு இரண்டு பணியளவில் ஆஃபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.

ஆஃபிசிலிருந்து கிளம்பி மெயின் ரோட்டில் ஒரு கிலோமீட்டர் கடக்கையில் பஸ் ஸ்டாப் ஓரம் ஒருவர் லிஃப்ட் கேட்டு கைகளை நீட்டிக்கொண்டிருந்தார். கவனித்தபோது அவரின் முகம் அவனுக்கு அவ்வளவு தெளிவாக தெரியவில்லை.

'சரி லிஃப்ட் கொடுப்போமே' என நினைத்து இடதுகை க்ளட்சை பிடித்து நிருத்த முற்படுகையில், பைக் ஹெட்லைட் வெளிச்சத்தில் அந்த நபரின் மூக்கும் கண்ணும் அவர் ஒரு நார்த் இந்தியன் என்பதை காட்டிக்கொடுக்க, அடுத்தகணம் வடதுகை ஆக்சிலேட்டரை முறுக்கிவிடுகிறது.

எனினும் அடுத்த 4 கிலோமீட்டரில் ஒரு கண்ஸ்ட்ரக்சன் கிரவுண்ட் அருகில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடம் வந்துவிடம் ஆக அந்தநபரை நம்பலாம் என நினைத்து மறுபடியும் இடதுகை க்ளட்ச்சை பிடிக்க, மறுகணமே வட இந்தியர் ஒருவர் லிஃப்ட் கொடுத்த ஒருவரின் கழுத்தையே அறுத்து, பர்ஸையும் லேப்டாப்பையும் கொள்ளையடித்ததாய் எங்கோ படித்த செய்தி ஒன்று நியாபகம் வர, ஒரேயடியாய் ஆக்சிலேட்டரை முறுக்கிய கை, வீட்டை அடைந்ததும்தான் ஆசுவாசம் அடைந்தது.

அவன் செய்த அந்தச்செயல் தூங்கவிடாமல் மனஉளைச்சலை அதிகப்படுத்திக்கொண்டிருக்க, "இந்த இரவுதான் எத்தனை இறக்கமற்றது" என தன் டைரில் எழுத முற்படுகையில் "த்தா பயந்தாங்கோலி நாயே!!" என எழுதிமுடித்தது அவன் பீச்சாங்கை.