25 Jan 2016

பைரைட் கியூப்

வட்டம்/கோளம் என்பது இயற்கை வடிவம், சதுரம்/கனசதுரம் என்பது செயற்கை வடிவம் என்பதுதான் என் புரிதலாக இருந்தது, இந்த 'பைரைட் கியூப்'ஐ பார்க்கும் வரை. "Natural Pyrite cubic crystals - இயற்கையாக உண்டான பைரைட் கனசதுர கனிமப்படிகம்" இதன் பெயர். பல கனிம படிகங்களை பற்றி நாம் பள்ளியிலே நிறைய படித்திருப்போம், படிகமானது வித விதமான வடிவ அமைப்புகளை பெற்றிருக்கும், உதாரணத்திற்கு, பனிக்குகைகளில் கூர் கூராக நீர் உறைந்து தொங்கிகொண்டிருக்கும் பனிக்கட்டி புகைப்படங்களை நினைத்துக்கொள்ளலாம், அது ஒரு உதாரணம் தான், அது போல பல வடிவ அமைப்புகளை கொண்ட க்ரிஸ்டல்கள் இயற்கையாகவே உள்ளன என்பது அறிந்ததே, ஆனால் கனசதுர அமைப்புகளில் இதுபோல இயற்கையான எந்த வடிவத்தையும் முன்னர் கண்டது இல்லை, குறிப்பாக உள்ளங்கை அளவுகளில். இந்த பைரைட் கனிமம், இரும்பு & சல்பைடின் கலவைதான், இது பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் துப்பாக்கிக்கு தீப்பற்றவைக்கும் மருந்தாக பயன்பட்டிருக்கிறது, பார்க்க தங்கம் போல இருப்பதால் 'Fool's Gold' என்ற பெயரும் உண்டு, இது கனசதுரம் மட்டுமல்லாமல் பல வடிவங்களில் இருந்தாலும் கவனத்தை ஈர்த்தது இந்த கியூப் வடிவம் தான்!.

                          


இந்த கியூபை பார்த்ததும் என் நியாபகத்திற்கு வந்தது, 1968'ல் எடுக்கப்பட்ட "2001-A Space Odyssey" என்ற படத்தில் வரும் சில காட்சிகள். 'குரங்கிலிருந்து மனிதன்', அதாவது, ஒரு குரங்கின் குகையில் திடீரென ஒரு வஸ்து தோன்றியிருக்கும் அதனைக்கண்ட குரங்குகள் முதலில் அச்சப்படும், பின்னர் ஒவ்வொன்றாக அதை தொட்டுப்பார்க்கும், அதை தொட்டுப்பார்த்த பின்னறே வேட்டையாடுதல், ஆளுமை செலுத்துதல் போன்ற சில அடிப்படை அறிவு அவைகளுக்கு கிடைத்ததாக அந்த படத்தின் இயக்குனர் சொல்லியிருப்பார். அந்த வஸ்து ஒரு "Monolith - ஒற்றைக்கல்" அதாவது இந்த கியூபைப்போலவே கருமை நிறத்தில் செவ்வகமாக நீண்டு இருக்கும் ஒரு Unknown Object. அந்த Object ஒரு ஏலியன் வஸ்து என்பதுபோலும், மனித அறிவுக்கு மேலான ஒன்றுதான், மனிதனுக்கு அடிப்படை அறிவை புகுத்தியதுபோலவும் படத்தின் இயக்குனர் சொல்லியிருப்பார்.


ஆக மனிதஅறிவுக்கு மேலான ஒன்று இருப்பதாக நானும் நம்புகிறேன், அது இயற்கையாகத்தான் இருக்க முடியும். இயற்கையை விஞ்சிய ஒரு அறிவோ, படைப்போ இல்லையென உணர்கிறேன். பல விதவிதமான வடிவங்களில் காட்சியளிக்கும் இயற்கையில், இந்த கியூப், சமுத்திரத்தில் ஒருதுளி.

21 Jan 2016

ப்ராப்ளம்


நேத்திக்கு மதியம் எனக்கு ஒரு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்துச்சு, ப்ரொஃபைல் நல்லா செக் பண்ணினப்புறம் அது ஒரு மலையாள பையனோட ப்ரொஃபைல்னு தெரிஞ்சது, பேரும் 'நிவின் பவுலே' கணக்கா நல்லாத்தான் இருந்துச்சு, மியூட்டுவல் ஃபிரண்டு யாருமில்லை ஆனாலும் ஒரிஜினல் ஐடிதான்னு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன், சோ அக்செப்ட் செஞ்சேன்!. ஃபேக் ஐடியாவே இருந்தாலும் அக்செப்ட் பண்ணுவேன்றது வேற கத!. அப்புறம் சாயங்காலம் நாலு மணிக்கிட்ட 'ஹாய் ப்ரோ'னு ஒரு மெசேஜ் வந்திருக்கு, நான் பாக்கல, அப்புறம் ஒரு ஆறு மணிக்கிட்ட 'ஹேய்'னு ஒரு மெசேஜ் அதையும் நா பாக்கல, இது கொஞ்சம் அதட்டுர தொனில வேற இருந்துச்சு, எட்டு மணிக்குதான் ரெண்டு மேசெஜயும் பார்த்தேன். சிலர் நீங்க வரையுறது நல்லா இருக்குனு வாழ்த்துறதுக்காகவும், சிலர் ஏதாவது சந்தேகங்களுக்காகவும் மெசேஜ் செய்வது வழக்கம் தான், ஆனாலும் இப்போல்லாம் சில பேர் நமக்கு டெக்ஸ்ட் பண்ணி நாம ரிப்ளை பண்ணலைனா கொஞ்சம் விரக்தியாயி ஒன்னு திட்டுறாய்ங்க, இல்லன வருத்தப்படுறாய்ங்க, நம்மால ஒருத்தர் ஹர்ட் ஆக கூடாதுனு நானும் 'ஹேய் ஹாய்' அப்படின்னு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.

எட்டு மணிக்கு ஒரு ரிப்ளை வந்தது 'டுமார்ரோ இஸ் மை பர்த்டே ப்ளீஸ் டிராயிங் மை போட்டோ' இப்படி இருந்தது. 'யார்றா இவன், யார்னே தெரியல டக்குனு விசயத்துக்கு வந்துட்டான், சரியான கிறுக்கனா இருப்பான் போல' அப்படின்னு நினைச்சு கொஞ்சம் சிரிப்புதான் வந்துச்சு, அப்புறம் அவன் ப்ரொஃபைல் ஃபுல்லா அலசுனதுல பையன் கொஞ்சம் தெளிவுதான்னு தெரிஞ்சது. அப்புறம் இன்னைக்கு, பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லிட்டு, மன்னிக்கணும் இப்போ என்னால வரைய முடியல முடிஞ்சால் இன்னொரு நாள் வரையரேன்னு சொல்லி ஒரு மேசேஜ அனுப்பிருக்கேன், என்ன ரிப்ளை வரும்னு காத்துட்ருக்கேன்!.

இங்கன வரையரவங்களுக்கெல்லாம் ஒரு பொதுவான சங்கடம் வரும் அதுக்கு பேரு "கேன் யூ ட்ராவ் மீ?" ப்ராப்ளம்!. அதுக்குள் நானும் அடக்கம். முன்னமே ஒருமுறை கேரளா நண்பரிடம் மாட்டினேன் "ப்ரோ, நீங்க என்னைய வரஞ்சு கொடுங்க, பதிலுக்கு நான் ஒன்னு செய்யுறேன், நானும் எங்க டீமும் இங்க நிறைய மலையாள நடிகைகளோட ஃபேஸ்புக் பேஜுக்கு அட்மினா இருக்கோம், சோ ஒரு ஹீரோயினோட ஃபோடோவையும் வரைஞ்சிங்கனா அந்த பேஜுல ஷேர் பண்ணி உங்களை ப்ரொமோட் பண்ணுறோம்"னு சொல்லி டீலிங் வேற பேசுனாப்ள, எப்படியோ சமாளிச்சு தப்பிச்சேன்!. ஒரு முறை பாகிஸ்தான்ல இருந்தும் இந்த சங்கடம் வந்தது, ஒருமுறை ரெண்டுமுறையல்ல அந்த பாகிஸ்தான் நண்பர் விடாம ஒரு பத்துபதினைந்துமுறை கேட்டுவிட்டார், உச்சகட்ட டென்சனுக்கு போனதுக்கு அப்புறம்தான் வரைந்து கொடுக்க முடிந்தது! அதுவும் நான் வரைந்த ஒரிஜினல் அவருக்கு தேவையில்லை, ஜஸ்டு வரைஞ்ச போட்டோவ ஷேர் பண்ணனும் அவ்வளவுதான், அப்புறம் அந்த நண்பரின் ப்ரொபைல் பிக்சர் போல்டெர் போன அப்புறம் தான் தெரிந்தது, என்னமாறி பல பேருகிட்ட வரைஞ்சு வாங்கிருக்காருன்னு!.

இது ஒரு பக்கமிருக்க, எனக்கு இதெல்லாம் விட பெரிய ப்ராப்ளம் இருக்குது அதுதான் வரையுறது, அவ்வளவு ஈசியா என்னால வரைய முடியறது இல்ல, பல நண்பர்கள் வரைய சொல்லி கேட்டிருக்குறாங்க, அதுல சிலருக்குதான் வரைஞ்சு தர முடிஞ்சிருக்கு, எனக்கு பிடிச்சவங்களுக்கு மட்டும்தான் வரையுவேன்னெல்லாம் ஒன்னும் இல்ல, பல நேரங்கள்ல வரையவே தோன மாட்டேங்குது அதுதான் பிரச்சனை. கமிஷனுக்கே வரையுறதுன்னாலும் இதே பிரச்சனைதான். ப்ளஸ் பலர் கொடுக்குற ஃபோட்டோக்கலிலும் குவாலிட்டி இருப்பதில்லை, இன்னும் சிலர் வரைஞ்ச போர்ட்ரெய்ட்ட வாங்காமலும் விட்ருக்காங்க, பட் அது பெரிய பிரச்சனை இல்ல! சில நண்பர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் வரைஞ்சு தர்றதா சொல்லி, பின்னால வரைய முடியாம போனதால பெரிய தர்மசங்கடத்துக்கும் ஆளாயிருக்கிறேன், காரணம் என்னன்னா மேல சொன்னதுதான் "வரைய தோன மாட்டேங்குது" அவ்வளவுதான். என் மேல கொஞ்சம் ஓவரா நம்பின ஒரு நண்பரின் நட்பையும் இழந்துமிருக்கேன், இத்தனைக்கும் அவர் அவரின் புகைப்படத்த வரைய சொல்லல, ஒரு சினிமா ப்ராஜெக்ட்க்காக வரைய சொன்னார். இதுபோல பலருக்கு நான் வரைஞ்சு தர்றதா சொல்லி பின்ன வரைய முடியாம போனதால, சில தருணங்கல்ல நிமிர்ந்து கூட பார்க்க முடியுறது இல்ல. இங்க எல்லாத்துக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டுக்குறேன்!. இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டி, எப்படி என்னை மாத்திக்கலாம்னு யோசிச்சுகிட்டிருக்கிறேன் ஏதாவது ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில்! 
smile emoticon

11 Jan 2016

நிதர்சனம்


வாழ்வின் நிதர்சனத்தை எண்ணி வானத்தையே பார்த்துகொண்டிருந்தான் அவன். நீலவானமும், உஷ்ணம் பீய்ச்சும் சூரியனும், வெண்மேகமும், இடம்பெயரும் பறவைகளும் தெரியுமென நினைத்திருப்பான் போலும் ஆனால் கண்களின் மேல் தெரிந்ததென்னவோ மிதக்கும் சில வஸ்துகள் தான். ஒன்றையாவது சற்று நிறுத்தி பார்த்துவிடலாம் என ஒவ்வொரு முறை எத்தனிக்கையிலும் வஸ்து அங்குமிங்கும் நகர்ந்துகொண்டேயிருந்தது.

வஸ்துவின் மேலிருந்த கவனம் விலகி சலிப்புதட்டியபின், எவையெல்லாம் தெரியுமென நினைத்தானோ அவையெல்லாம் தெரிய ஆரம்பித்தது. நிதர்சனமென்பது யாதென அப்போதுதான் புரிந்தது அவனுக்கு.

நிதர்சனமென்பது பார்வைதான்!

6 Jan 2016

ரணம் சுகம்


எவர்மேலும் நம்பிக்கையின்றி, எல்லோரையும் சந்தேகக்கண்களோடு பார்க்கும் சிலரை காணமுடிகிறது, யாரோ ஒருசிலரால் காயம்பட்டிருக்கலாம் அதற்காக சொந்தம், நட்பு, அனுதினம் பார்க்கும் மனிதர்கள் என எல்லோரிடத்திலும் வெறுப்பை உமிழ்கின்றனர் அல்லது விலகியே இருக்கின்றனர், இப்படியே இருக்க வேண்டுமா என்ன!. 


எல்லோரையும் நேசிக்கலாம், ஒரே தருணத்தில் எல்லோரும் நம் எதிர்பார்ப்புகளை குத்திக்கிழித்துவிடப்போவதில்லை. எல்லோரிடத்திலும் நேசம் கொள்கையில் ஒருவர் குத்திக்கிழித்தால் அவ்வளவாக வலிக்கப்போவதுமில்லை. மாறாக ஒரே இடத்தில் நாம் அன்பை குவித்துவைக்கையில் சரிந்து விழத்தான் செய்யும் பின் அந்த வலிக்கு மருந்துகள் கிடைக்கவே கிடைக்காது.

எல்லோரையும் நம்புதல் எவ்வளவு அபத்தமோ, அதைவிட அபத்தமும் ஆபத்தும் நிறைந்தது எவரையும் நம்பாமல் தனித்து இருத்தல். எல்லோரையும் நேசிப்போம், குத்திக்கிழிப்பவர்கள் கிழிக்கட்டும், அந்த வாய்ப்பை எல்லோருக்கும் கொடுப்போம், அப்போதுதான் அதற்கு மருந்தும் கிடைக்கும். 

ரணம் சுகம் 
heart emoticon