25 Jan 2016

பைரைட் கியூப்

வட்டம்/கோளம் என்பது இயற்கை வடிவம், சதுரம்/கனசதுரம் என்பது செயற்கை வடிவம் என்பதுதான் என் புரிதலாக இருந்தது, இந்த 'பைரைட் கியூப்'ஐ பார்க்கும் வரை. "Natural Pyrite cubic crystals - இயற்கையாக உண்டான பைரைட் கனசதுர கனிமப்படிகம்" இதன் பெயர். பல கனிம படிகங்களை பற்றி நாம் பள்ளியிலே நிறைய படித்திருப்போம், படிகமானது வித விதமான வடிவ அமைப்புகளை பெற்றிருக்கும், உதாரணத்திற்கு, பனிக்குகைகளில் கூர் கூராக நீர் உறைந்து தொங்கிகொண்டிருக்கும் பனிக்கட்டி புகைப்படங்களை நினைத்துக்கொள்ளலாம், அது ஒரு உதாரணம் தான், அது போல பல வடிவ அமைப்புகளை கொண்ட க்ரிஸ்டல்கள் இயற்கையாகவே உள்ளன என்பது அறிந்ததே, ஆனால் கனசதுர அமைப்புகளில் இதுபோல இயற்கையான எந்த வடிவத்தையும் முன்னர் கண்டது இல்லை, குறிப்பாக உள்ளங்கை அளவுகளில். இந்த பைரைட் கனிமம், இரும்பு & சல்பைடின் கலவைதான், இது பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் துப்பாக்கிக்கு தீப்பற்றவைக்கும் மருந்தாக பயன்பட்டிருக்கிறது, பார்க்க தங்கம் போல இருப்பதால் 'Fool's Gold' என்ற பெயரும் உண்டு, இது கனசதுரம் மட்டுமல்லாமல் பல வடிவங்களில் இருந்தாலும் கவனத்தை ஈர்த்தது இந்த கியூப் வடிவம் தான்!.

                          


இந்த கியூபை பார்த்ததும் என் நியாபகத்திற்கு வந்தது, 1968'ல் எடுக்கப்பட்ட "2001-A Space Odyssey" என்ற படத்தில் வரும் சில காட்சிகள். 'குரங்கிலிருந்து மனிதன்', அதாவது, ஒரு குரங்கின் குகையில் திடீரென ஒரு வஸ்து தோன்றியிருக்கும் அதனைக்கண்ட குரங்குகள் முதலில் அச்சப்படும், பின்னர் ஒவ்வொன்றாக அதை தொட்டுப்பார்க்கும், அதை தொட்டுப்பார்த்த பின்னறே வேட்டையாடுதல், ஆளுமை செலுத்துதல் போன்ற சில அடிப்படை அறிவு அவைகளுக்கு கிடைத்ததாக அந்த படத்தின் இயக்குனர் சொல்லியிருப்பார். அந்த வஸ்து ஒரு "Monolith - ஒற்றைக்கல்" அதாவது இந்த கியூபைப்போலவே கருமை நிறத்தில் செவ்வகமாக நீண்டு இருக்கும் ஒரு Unknown Object. அந்த Object ஒரு ஏலியன் வஸ்து என்பதுபோலும், மனித அறிவுக்கு மேலான ஒன்றுதான், மனிதனுக்கு அடிப்படை அறிவை புகுத்தியதுபோலவும் படத்தின் இயக்குனர் சொல்லியிருப்பார்.


ஆக மனிதஅறிவுக்கு மேலான ஒன்று இருப்பதாக நானும் நம்புகிறேன், அது இயற்கையாகத்தான் இருக்க முடியும். இயற்கையை விஞ்சிய ஒரு அறிவோ, படைப்போ இல்லையென உணர்கிறேன். பல விதவிதமான வடிவங்களில் காட்சியளிக்கும் இயற்கையில், இந்த கியூப், சமுத்திரத்தில் ஒருதுளி.

No comments:

Post a Comment