24 Dec 2017

மேற்க்கத்திய மக்களுக்கும் நமக்கும் இடையேயான பலஆயிரம் மைல் தொலைவு


'Have you ever noticed in western movies, people' carrying gloves when they took their dog for walk?' இது சமீபத்திய மீட்டிங்கின் போது ஒருவர் எங்களை நோக்கி கேட்ட கேள்வி. பலருக்கும் நினைவிலிருந்ததோ அல்லது சட்டென புரிந்துகொண்டார்களோ தெரியவில்லை அமைதியாக தலையசைத்தனர், எனக்கு ஒரு ஐந்து வினாடிகள் ஆனது ஏன் என புரிந்துகொள்ள. உங்களுக்கு எவ்வளவு நேரமானதென்று தெரியவில்லை!.

தன் நாயை ஒரு நடைக்கு கூட்டிச்செல்லையில் அது பூங்காவிலோ, சாலையோரத்திலோ அல்லது வேறெங்கிலும் பொது இடத்திலோ அதன் கழிவை இட்டுவிட்டால் அதை எடுத்து அப்புறப்படுத்தவே அந்த க்ளவுஸ். எவ்வளவுதான் நாமலும் பிராணிகளிடத்தில் ப்ரியமாக இருந்தாலும் இதுபோன்ற பழக்கமெல்லாம் நமக்கு வரவே வராது, ஏனென்றால் நம் வளர்ப்பு அப்படி. நம்மை பொறுத்தவரை பிராணிகளின் மீதான ப்ரியம் மற்றும் சமூக நன்மதிப்புகள் என்பவைகளுக்கிடையில் பல மைல்கள் தொலைவு உண்டு.

சொல்லவந்த விசயத்திற்க்கு வருகிறேன், கொஞ்சம் முன்னால் அலுவலகத்திலிருந்து திரும்பிவருகையில் ஒரு மாட்டின் மீது மோதி இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கவேண்டியது, கொஞ்சம் சுதாரித்துகொண்டதில் இருவரும் பிழைத்தோம். கிட்டத்தட்ட நடு ரோட்டில்தான் படுத்திருந்தது, எதிரில் வந்த காரின் வெளிச்சம், தூசி, பனி என எல்லாம் சேர அது படுத்திருந்ததே கண்ணிற்க்கு தெரியவில்லை.

மேற்க்கத்திய மக்களுக்கும் நமக்கும் இடையேயான இந்த பலஆயிரம் மைல் தொலைவு என்றுமே குறையாது போலும். 😐

17 Dec 2017

Gutland - Beauty of not explaining much

'Govinda Van Maele' இந்த பேருதான் முதல்ல GUTLAND படத்த பார்க்க ஈர்த்தது, நம்ம நாட்டுக்காரர் போல, ஜெர்மன்ல செட்ல் ஆகிருக்கணும், எப்படி படம் எடுத்துருக்காருன்னு பாக்கணும்னுதான் தேவிபாலா போனேன். முன்னாடியே நண்பர்கள் எச்சரித்ததுமாதிரியே தியேட்டராயா அது? எல்லா தியேட்டர்லயும் முன்னாடி நிக்கிறவன்/உட்காந்திருக்குறவன் தல தான் மறைக்கும் இதுல பின்னாடி போறவன் வர்றவன் தலைலாம் ஸ்கிரீன்ல தெரியுது, அதும் தேசிய கீதத்துக்கு எல்லாரும் எழுந்து நிக்கிறப்போ பாக்கணுமே தியேட்டர்ல இருக்குற பாதி பேரோட பாதி உடம்பு நிழல் ஸ்க்ரீன்ல பட்டு அப்டியே பேக்ட்ராப்பில நம்ம தேசியக்கொடி ஸ்க்ரீன்ல பறக்குறத பாக்க புல்லரிச்சுருச்சு.


படத்துக்கு வர்றேன், Beauty of not explaining much'னு ஒன்னு சொல்லுவாங்க அதுக்கு நல்ல எக்ஸ்சாம்பில் இந்த படம், பாக்குறவங்கதான் தானே புரிஞ்சிக்கணும், ஆனா அதுக்காக ரொம்போ தட்டையாவெல்லாம் கதை சொல்லல, நல்ல அழகா கொண்டு போயிருக்கார். லக்ஸம்பர்க்ல ஒரு சின்ன கிராமத்துல நடக்குறமாதிரி கதை, படம் பாத்ததும்தான் தேடி பாத்தேன் லக்ஸம்பர்க்கின்றது ஒரு சின்ன யூரோப் கன்ட்ரியாம் சுற்றி பெல்ஜியம், ஃபிரான்ஸ் அப்புறம் ஜெர்மனியும் இருக்கு. எல்லாருக்கும் தனித்தனி மொழி இருக்குறமாதிரி இந்த நாட்டு மக்களுக்கும் லக்ஸம்பரிஷ் அப்டினு ஒரு மொழி இருக்கு போல, ஆனா நான் பார்த்தது எந்த மொழின்னு தெரியல.



'Surrealist rural noir' இப்படித்தான் இந்த படத்தோட ஜானர் பத்தி சினாப்ஸிஸ்ல போட்டிருந்தாங்க, சர்ரியலிசம்ன்னு பாத்த உடனே டாலி நியாபகம் வந்தது, கூடவே படத்தோட டைரக்டர் பேர்ல வான் இருந்ததால வான்கா நியாபகமும் சேர்ந்து வந்து, இதனாலவெல்லாம்தான் இந்த படம் என்ன அனுபவம் தறுதுன்னு பார்த்தே ஆகணும்னு வந்து உட்காந்தேன், நான் எக்ஸ்பெக்ட் பண்ணி வந்த எந்த கேமிரா/ஆர்டிஸ்டிக் டைப் மொக்கையும் இல்லவே இல்லை, சர்ரியலிஸ்டிக்ன்றத கதை சொல்லும் விதத்துலதான் பண்ணியிருந்தார் கேமராவுல இல்ல, அப்புறம் இந்த படத்துக்கு சினிமாட்டோகிராபி Narayan Van Maele அப்டினு போட்ருந்தது, டைரக்ட்டரோட சகோதரப்போல, லக்சம்பர்கின் அந்த கிராமத்த காட்சிப்படுத்துயிருந்த விதமும், காலநிலைக்கு ஏத்தமாதிரியான அந்த கலர் டோனும் லவ்லி.



அப்புறம் மியூசிக், ஒரு ரெண்டே ரெண்டு விதமான பேட்டர்ன்லதான் மியூசிக் இந்தமாதிரி இருந்தது, ரெண்டும் அப்போ அப்போ தேவையான இடத்துலமட்டும் வந்து போனதால சலிக்கவே இல்ல ஒருவிதமா கொஞ்சம் புதுசா இருந்தது, முதல்லயே அவர் இந்திய புலம்பெயர் பிரஜைனு பாத்துட்டு போனதுனாலயோ என்னவோ மியூசிக்ஸ் வர்றப்போவெல்லாம் நம்ம ஊரு மியூசிக்தான் நியாபகம் வந்தது, நம்ம ஊரு மியூசிக் என்னுமிடத்தில் ராஜா சாரை மாற்றிப்படித்துக்கொள்ளவும்.



மொத்தத்துல நிறைய எதிர்பார்ப்புகளோட இந்த படத்துக்கு போனேன், கொஞ்சமும் ஏமாற்றவில்லை. இந்த சர்ரியலிஸ்டிக் ரூரல் னாய்ர் அப்படின்றதெல்லாம் என்னால சொல்லிப்புரிய வைக்க முடியும் ஆனா அது படத்துல பாக்குற அளவுக்கு நல்லா இருக்காது. ஆக நம்பி பார்க்கலாம், வர்ற புதன் அன்னைக்கு அண்ணா தியேட்டர்ல ஃபர்ஸ்ட் ஷோ மறுபடியும் ரீ-ஷோ இருக்கிறது, தேவிபாலாவின் இலைமறை காய்போல் இல்லாமல் தெளிவாகப்பார்க்கலாம்.
#Gutland #15thCIFF #Day4

15வது சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவல்-மூன்றாம் நாளில் ஒரு ராமன் ராகவ்


நேற்று சாயங்காலம் 'ஹார்ட்ஸ்டோன்' படம் பார்ப்பதற்க்காக கேசினோவில் அமர்ந்திருந்தேன். படம் ஆரம்பிக்க பத்து நிமிடமிருந்தது 'ஹாய் அயம் ராமன்..' என்றவாறே ஒரு கேரக்டர் அறிமுகமாகிக்கொண்டு பக்கத்தில் வந்து அமர்ந்தது, வயது 65 முதல் 70ற்க்குள் இருக்கும். 'நீங்க ஃபில்ம் இண்டஸ்ட்ரீல இருக்கிங்களா?' என்றார் 'இல்ல சார் நான் ஒரு ஐடி கம்பினில வொர்க் பண்றேன்' என்றேன். 'ஓ வெரி நைஸ் நான் கூட பேங்க்ல வொர்க் பண்ணினேன் எனக்கும் சினிமாலாம் ஒன்னும் தெரியாது அயம் ஜஸ்ட ஃபேன். அய்ம எக்ஸ்-பேங்கர், வி.ஆர்.எஸ் வாங்கிட்டேன், கொல்கத்தா பூனேன்னு அலையவிட்டா, இது நமக்கு சரிபட்டு வராதுன்னு வேலைய விட்டுட்டேன். இப்போ வீட்டுல சும்மாதான் இருக்கேன், வீட்டுல தண்ணிதெளிச்சு விட்டுட்டா அதான் டெய்லி ஃபெஸ்டிவல்க்கு வந்து படம் பாத்துண்டு போறேன்' என்றார். பதிலுக்கு 'நல்லதுங்க சார்' என்றேன்.

ஒரு இரண்டு மூன்று செகண்ட் கேப் விட்டு மீண்டும், 'இதுவரைக்கும் பார்த்ததுலயே எந்த படம் பெஸ்டுனு நீங்க ஃபீல் பண்றேள்' என்றார், 'நேத்திபாத்த நோ டேட் நோ சைன் அப்புறம் இன்னைக்கு பாத்த லைஃப் இஸ் லவ்லி' என்றேன் 'ஓ.. ரெண்டையுமே நல்ல படம்னு படம் பாத்த சில லேடீஸ் பேசின்ருந்தா, ப்ச், மிஸ் பண்ணிட்டேன் ரீ-ஷோ இருக்கா?' என்றார் 'தெர்ல சார் ச்செக் பண்ணனும்' என்றேன், உடனே கையிலிருந்த புக்லெட்டில் தேட ஆரம்பித்தார். மீண்டும் சற்று நேரத்திலேயே 'அண்ணா தியேட்டர் வாட்ச்மேண்ட பேசிட்ருந்தேன் அவன்டயும் இப்டிதான் எந்த படம் நல்ல மடம்னு சொல்லுறாங்கன்னு கேட்டேன் அவன் நைட்டு போடுற செக்ஸ் கவ்பாய்னு சொல்லிட்டு நமட்டு சிரிப்பு சிரிச்சான் அதுலயே புரிஞ்சுண்டேன்.., இந்த காலத்துல எல்லாம் சாதாரணமா போச்சு ஃபோன்ல செக்ஸ்னு டைப் பண்ணாலே எல்லாம் வருது அப்போலாம் அப்டி இல்ல!' என்றார், பதிலுக்கு 'அமா சார்' என்றேன்

இப்படியே தொனதொனவென பேசிக்கொண்டே போனார், முன்னமாக காலையில் 'லைப்ஃ இஸ் லவ்லி' படம் பார்த்திருந்ததால் அவரை எந்த விதமான ஜஸ்டிஃபையும் செய்ய மனம் ஒப்பவில்லை, சரி பேசிவிட்டு போகட்டும் என்ற மனநிலையில் இருந்தேன். பிறகு கேசினோ தியேட்டரை பற்றி பேசத்துவங்கினார், 'எல்லா தியேட்டர்லயும் அடுத்தவா தலை மறைக்கும் ஆனா கெசினோல மட்டும் மறைக்கவே மறைக்காது பாத்தீங்களா ஃப்ளேர் எப்டி க்கர்வா இருக்குன்னு, ஸ்க்ரீன கூட ஒரு பத்து பதினஞ்சு வருசத்துக்கு முந்தி ஒரு 15 ஃபீட் முன்ன கொண்டு வந்துட்டா, அப்போலாம் ஸ்கீர்ன சுத்தி டிசைன் இருக்கும், செண்டர்ல ஒரு தேவதை இருக்கும் அவகிட்ட இருந்து ரெண்டு பிலிம் ரோல் மாலைமாதிரி வந்து ஸ்கிரீனோட ரெண்டு பக்கமும் விழும் அந்த இடத்துல ரெண்டு பொண்கொழந்தைங்க இருக்கும், அருவி மாதிரி பெயிண்ட் பண்ணிருப்பா சும்மாவா 1936ல கட்டின தியேட்டர் இது அப்போலாம் அப்டி இருக்கும்' என பேசி முடித்தார்.

கொஞ்ச நேரத்தில் 'ப்ளடி மில்க்கோட க்ளைமேக்ஸ்ல என்னாச்சு?, பாக்கவே முடியல, அவன சேஃப் குவார்ட் பண்ணுறதுக்காக பசுமாட்டையெல்லாம் புடிச்சு அடிச்சு கொண்ணு ப்பா ரெண்டாவது மாட்ட சுடுறப்போவே நான் வெளில போயிட்டேன்' என்றார். 'நல்ல வேல சார் வெளில போயிட்டீங்க மிச்சமிருந்த எல்லா மாட்டையும் கவெர்ன்மெண்டே கொண்றுச்சு!' என்றேன். 'கவெர்மெண்டேவா கொன்னுச்சு! பாவம், எப்டி இருந்தாலும் அந்த நோய்லயே எல்லாம் செத்திருக்கும், அப்ப அவன் காப்பாத்ததான் நெனச்சுருப்பான் போல..' என அவர் சொல்லிமுடிக்க சரியாக தேசியகீதம் ஆரம்பித்தது.

'ஃபெஸ்டிவல்ல ஃபர்ஸ்ட் ஷோல மட்டும் நேஷனல் ஆன்தம் போடலாம், எல்லா ஷோவுக்கும் தேவ இல்லனு ஃபீல் பண்றேன், வயசானவால்லாம் எப்டி எழுந்து எழுந்து உக்காருவா' எனச்சொல்லி அமர்ந்தார். பேசியே படம் பார்க்க விடமாட்டார் என்றுதான் நினைத்திருந்தேன். நல்லவேலை படத்தின்போது அவர் எதுவும் பேசவில்லை, பிறகு ஹார்ட்ஸ்டோனிலும் பாதியிலேயே கிளம்பிவிட்டார். அவர் பேசியதெல்லாம் வைத்து பார்க்கையில் அவர் 'எனக்கு வந்தா ரத்தம் உனக்கு வந்தா தக்காளி சட்னி' ரகம் என தெரியவந்தது.
#15thCIFF #Day3

15 Dec 2017

15வது சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவல்-முதல் நாள்


போன மாசம் உபெர்ல மிஸ் பண்ணின tripod'அ வாங்க கார் ட்ரைவர் வீட்டுக்கு போக வேண்டி இருந்தது, மேடவாக்கம்ல இருந்து ஆவடிக்கு முன்ன இருக்கிற காடுவெட்டிக்கு மொத்தம் 35 கிலோ மீட்டர், அப்புறம் அங்கிருந்து அண்ணா தியேட்டர் ஒரு 25 கிலோமீட்டர் அங்க ஃபர்ஸ்டு ஷோ முடிச்சு, அப்புறமா பக்கத்துல தேவி தியேட்டர்ல அடுத்த ஷோ, அப்புறமா அங்க இருந்து ஆஃபிசுக்கு ஒரு 25 கிலோமீட்டர், மொத்தமா இன்னைக்கு மட்டும் 85 கிலோமீட்டர். இப்படியாக ஆரம்பிச்சிருக்கேன் இந்த வருட சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவல. இன்னைக்கு கீழ இருக்குற இரண்டு படங்கள பார்க்க முடிஞ்சது

1. The President (El Presi) 2017/70”/Spanish
.
கொஞ்சம் லேட்டா போனதால முதல் 10 நிமிசத்த தவற விட்டுட்டேன். பார்த்த மிச்ச படத்தோட கதை சொல்லும் விதம் கொஞ்சம் ஓல்டு ஸ்கூலா இருந்தாலும் சூப்பரா இருந்தது. படம் முழுக்க ஒரு கார்லயே நடக்குற மாதிரி இருந்தது. எனக்கு தெரிஞ்சு கேமிராவை காரவிட்டு வெளிலயே கொண்டு வரலன்னு நினைக்கிறேன். ஒரு ப்ரெசிடெண்டா தேர்வாகிட்ட மனுசனோட உண்மையான கேரக்ட்டரையும், அதை எப்படி அவன் ஒரே நாள் இரவுல மறைக்க ட்ரை பண்ணுறான்றதையும், அவனோட ஊர்ல, ஒரு கார்லயே சொல்லிடுது இந்த படம். லோ படஜெட் படம் ஏடுக்குறதுக்கு இந்த படமும் ஒரு நல்ல உதாரணம். கொஞ்சம் படத்த பத்தி தேடலாமேன்னு கூகுள் போனா இந்த படத்தோட ஒரு போஸ்ட்டர் கூட இல்லன்றது ஆச்சர்யமா இருந்தது. யுடியூப்ல மட்டும் அதோட ட்ரெய்லர் வீடியோ இருக்கு அதும் அந்த படத்தோட டைரக்டரேதான் போட்டிருக்கார், மொத்தமே 700 வியூஸ், 1 லைக் அப்புறம் 1 டிஸ்லைக், மனுசன் எந்த நம்பிக்கைல எதுக்காக இந்த படம் எடுத்தாருன்னே தெரில.

2. I Remember You (Ég man þig) 2017/105'/Icelandic
.
த்ரில்லர் படம், படத்தோட கடைசி தருணம் வரைக்கும் நாட்ட அவுக்காம செம்மயா கொண்டு போயிருந்தாங்க. படத்தோட கதைதான் என்னால இன்னும் தெளிவா புரிஞ்சிக்க முடியல. ஹார்ரர் & மிஸ்ட்ரீ சப்ஜக்ட்ன்றதால படத்துல வர்ற சிலபல சீன்கள் படத்துல இருக்குற சில கேரக்டர்ங்களோட கற்பனையாதான் இருக்கும்ன்ற டெம்ப்லேட்ட இந்த படமும் மீறல ஆனாலும் வொர்த்தான படம்தான்.

#15thCIFF #Day1

3 Nov 2017

choker என்றொரு வஸ்து

Choker என்ற ஒரு வஸ்து இருக்கிறது, இதுவரை அதோட பெயர்தான் நமக்கு தெரியாமல் இருந்திருக்கும். அது பெண்கள் கழுத்த சுத்தி போட்டுக்குற ஒரு நெக்லெஸ் டைப், சில படங்களில் பார்த்திருக்கலாம். இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு பொண்ணுங்கள மட்டும்தான் இந்த choker போட்டிருந்து பாத்திருக்கிறேன். ரெண்டு பேரும் அவ்வளவு அழகு!. Matter is simple, இந்த நோஸ் ரிங் போட்டிருக்கும் பெண்களை நமக்கு பாத்ததும் பிடிச்சிரும் இல்லையா அதேமாதிரிதான் இதுவும். ஆனா பார்க்குற சிலருக்கு பிடிக்காமாவும் போகவும் வாய்ப்பிருக்கு, அதுக்காக அவங்களோட ரசனையை நாம கேள்விகேக்கணும்னு அவசியம் இல்ல. ஆக்சுவலா அவங்களே அவங்கள நல்லா கேள்வி கேட்டுக்கணும். இன்னொரு விஷயம், பார்த்ததுமே பிடிச்சிரும்னு சொன்னேன் இல்லையா? நிச்சயமா பிடிக்கும்! ஆனா அவ்ளோ சிக்கிரம் அவங்ககிட்ட நம்மளால நெருங்கி பேசிரமுடியாது, ஏன்னா நம்மளோட டிசைன் அப்புடி!

விஷயம் என்னன்னா "choker வந்து மேற்கத்திய நாடுகள்ல ஒரு காலத்துல prostitutes'ங்கதான் போட்டுட்ருந்தாங்க, அது அவர்களுக்கான அடையாளம், ஆக அத போட்டுக்குற பொண்ணுங்களா! கொஞ்சம் அத தெரிஞ்சுக்கிட்டு போடுங்க!"ண்றதுபோல கொஞ்சநாள் முன்னால ஒரு போஸ்ட் பார்த்தேன். பதிலுக்கு கமெண்ட் பாக்ஸ்ல "கொஞ்சம் லோ ஹிப் பேண்ட்ஸ் பத்தியும் தெரிஞ்சுக்கங்களேன்"றதுபோல சிலர் எழுதியிருந்தாங்க, அதுக்குமேல அங்க சொல்ல ஒன்னும் இல்ல.

இங்க சொல்ல வந்த ஃபர்ஸ்ட் பாய்ண்ட் என்னன்னா ஒரு ஃபேஷ்னறது அது பரவி கிடக்குற வெவ்வேறு காலத்துல வெவ்வேறு பொருள் படும், அதுக்கு நிறைய உதாரணம் இருக்கு தேடி பார்க்கலாம். பழசை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுதான் ஃபாலோ பண்ணனும்னு எந்த அவசியமும் இல்ல. அதேபோல சுத்தமா சம்பந்தமே இல்லாமல் ஒரே வகை ஃபேஷன் இரண்டு வெவ்வேறு ரீஜியன்களில் இருந்துமிருக்கிறது. ரெண்டாவது பாய்ண்ட், இந்த நோஸ் ரிங், ச்ச்சோக்கர் இதெல்லாம் போடுறாங்க இல்லையா? அவங்க வெறுமனே பிசிக்கல் அட்ராக்சனுக்காக போடுறது இல்ல, அதெல்லாம் தாண்டி அவங்களுக்கே அது பிடிச்சதனாலதான் போடுறாங்க, சோ அவங்க கான்ஃபிடண்டாகத்தான் இருப்பாங்க அதைப்பத்தியெல்லாம் நாம கவலைப்பட வேண்டி தேவை இல்லை. நாம கவலைப்பட வேண்டியது எல்லாம் அந்த லோ ஹிப் ஜீன்சை பற்றித்தான்.

31 Aug 2017

லெனோவோவின் மெடுலாம்லெங்கெட்டா

சரியா பத்து மணிக்கு ரூமில் பவர் கட் ஆனது, அவசரத்துக்கு ஃபிளாஷ் லைட் ஆண் பண்ணலாமேன்னு ஃபோனில் தேடினேன் அதை காணவில்லை. அப்புறம் தாம்பரம் வந்ததும்தான் கவணித்தேன் ஃபோனில் கேமெராவே வேலை செய்யவில்லை. 'Kindly notice, camera not working' என்று எர்ரர் வந்தது. உடனே ஃபேஸ்புக் லைவ் போயி கேமெரா வேலை செய்கிறதான்னு செக் பண்ணினேன், இன்ஸ்டா & வாட்ஸ்ஆப் போயி செக் பண்ணினேன், இன்னும் பிற வகையறாக்களிலும் செக் பண்ணினேன். ஆப் செட்டிங்ஸ்ல போயி கேமமெராவை force stopம் செய்தேன் ஒன்றும் நடக்கவில்லை.

பிறகு கூகுளில் இறங்கியும் தேடினேன் பதில் மட்டும் கிடைத்தபாடில்லை. தேடியதில், lenovo ஃபோன்கலில் இது அதிகம் வருவது போல் ரிவ்யூக்கல்தான் கண்ணில் பட்டன, மறுகணம் நான் lenovo-k6-power'ஐ சூப்பர் பட்ஜட் ஃபோன் என சஜ்ஜஸ்ட் செய்திருந்த அந்த ரெண்டுபேரின் முகங்கள்வேறு நியாபகத்திற்கு வந்தது.

'Kindly notice, camera not working-solved' என்பதுபோல் கூகுளின் முதல் பேஜிலேயே ஒரு லிங்க் இருந்தது, பொதுவாக solved என்று வரும் எல்லா லிங்க்குகளும் குப்பையாத்தான் இருக்குமென்பதால் உள்ளே போகவில்லை, சரி போய்தான் பாப்போமே என ஒரு நப்பாசையில் நுழைந்ததில் 'restart can help to resolve this' என்றிருந்தது. 'ஆக...' என வலதுமூளை சொல்ல, 'ட்ரை பண்ணு' என இடது மூளை ட்ரிக்கர் செய்தது.

கொடுமையான விஷயம் என்னவென்றால் ரீஸ்டார்ட் செய்ததும் ப்ராப்ளம் சால்வ் ஆகிவிட்டது. கை ஸ்லிப் ஆகி எப்போவோ கீழே விழுந்ததில் ஃபோனின் மெடுலாம்லெங்கெட்டாவில் அடிபட்டிருக்கும் போல, ரீஸ்டார்ட் பண்ணியிருந்தாலே சரியாகிருக்கும். நான்தான் தேவையில்லாமல் சப்ரஷன் டிப்ரஷன் அப்ரஷன் ஆனதில் ஒரு ஒன்றரை மணிநேரமும், 30% பேட்டரியும் வீண். 😔

24 Aug 2017

Hugo- Hugo

போனமுறை ஊருக்கு சென்றிருந்தபோது லோக்கல் சேனலில் புரூஸ்-லி என்கிற காவிய தமிழ்படத்திலிருந்து ஒரு காமெடி(?) சீன் பார்க்க நேர்ந்தது, 'ஜோக்கர் சீன் இன் புரூஸ் லீ' என்று யூ-டியூப்ல் தேடினால் அது கிடைக்கும். அந்த சீனில் ஜோக்கர் வேடத்தில் முனீஸ்காந்த் காரிலிருந்து இரங்கியதும் ஒரு இங்க்லிஷ் ஆல்பம் மியூசிக் வரும், கேட்ட முதல் தடவையே சில பாடல்கள் ஈர்த்துவிடுமல்லவா அதுபோன்றதொரு பாடல் அது. கொஞ்சம் pharrell williams'ன் happy பாடலை நினைவுபடுத்தியது.

பின்னர் அதைப்பற்றி தேடியதில் அது Old tyme relegion என்கிற ஆல்பத்தில் வரும் 99 problems என்கிற பாடல், Hugo என்பவர்தான் அந்த ஆல்பத்தின் ஆர்டிஸ்ட். ஏற்கனவே 'Hugo' என்கிற ஹாலிவுட் படம் ஒன்று பார்த்திருக்கிறேன், எனக்கு சிறுவயதில் கண்டிருந்த பல கனவுகளின் கோர்வை போன்ற அனுபவத்தை தந்த லவ்லி படம் அது. கனவுகளை விளக்கிச்சொல்வது கஷ்டம் அல்லவா ஆக படத்தை இறக்கி பார்த்துக்கொள்ளுங்கள் அல்லது விக்கி அல்லது ஐ.எம்.டி.பி-யில் தேடிப்படித்துகொள்ளுங்கள்.

இப்போ இந்த 'Hugo' விற்கு வருகிறேன், இவரைப்பற்றி தேடியதில் இவர் இங்கிலாந்தில் பிறந்து தாய்லந்தில் வளர்ந்து இப்போ நியூ-யார்க்கில் வசிக்கும் ஒரு சிங்கர் & சாங் ரைட்டர் என்றிருந்தது, கூடவே "He can trace direct royal heritage back from his maternal great-grandfather" எனவும் இருந்தது. விக்கியில் ட்ரேஸ் செய்ததில் இவரின் முன்னோர்கள் ஒரு ஏழு தலைமுறை அரசர்கள் என தெரியவந்தது கூடவே எல்லோரும் விக்கியிலும் இருக்கிறார்கள்.

நான் சொல்லவந்த தரவுகள் அவ்வளவுதான், Hugo என்கிற பெயர்தான் என்னை எல்லாவற்றையும் தேடிப்பார்க்கவைத்தது என நம்புகிறேன், கூடவே எதோ ஒரு ஈர்ப்பு அந்த பெயரில் இருக்கிறதாகவும் நம்புகிறேன். இனி அந்த "Hugo" படத்தையும், இந்த "Hugo" வின் ஆல்பங்களை தேடிப்பார்த்தும்/கேட்பதும் உங்கள் விருப்பம். 😉

16 Aug 2017

Koh-i-noor hardtmuth toison d'or 1900

Koh-i-noor hardtmuth toison d'or 1900, இதுதான் நான் யூஸ் பண்ணுற பென்சில், அப்புறம் என்கிட்ட சஜ்ஜசன் கேக்குறவங்களுக்கு நான் சொல்லுறதும் இதுதான். கூடவே நான் சேத்து சொல்லுற இன்னொரு பிட்டு, 'அதாவது டார்க் ஷேட்லாம் அப்டி இருக்கும், சூப்பர் பென்சில்தான், ஆனா சீவ சீவ முக்குதான் உடஞ்சிட்டே இருக்கும்'னு சொல்லுவேன்.
இப்டியே சொல்லிட்டே இருந்தா வேலைக்கு ஆகாதுனு அந்த கம்பெனிக்கு கடுதாசி ஒன்னு எழுதுயிருந்தேன், ரெண்டுநாள்க்கு முன்ன பதில் வந்தது. 'உங்களோட அப்சர்வேஷனுக்கு நன்றி, நாங்க நல்லா செக் பண்ணிட்டோம் அந்த மாதிரி ப்ரச்சனையெல்லாம் இந்த பென்சில்ல இல்ல, எதுக்கும் நல்லா யோசிச்சு பாருங்க, நீங்க டேபில்ல இருந்து அல்லது அதுபோல கொஞ்சம் ஒசரத்துல இருந்து கீழ போட்டிருக்கலாம், அதுனால பென்சில் disrupted ஆகிருக்கலாம். However, we thank you for the information, we will keep an eye on the quality of graphite pencils.'னு சொல்லி சுபம் போட்டுருக்காங்க.
நானும் உக்காந்து நல்லா யோசிச்சு பாத்ததுல, நாந்தான் பல முறை கீழபோட்ருக்கேன்னு நியாபகம் வந்திருக்கு. அனாலும் ஒரு டெஸ்ட் எஞ்சினியறா உட்காந்து யோசிக்கசொல்ல, கீழ விழுந்தாலும் உடையாதமாதிரில்ல டெலிவர் பண்ணனும் இது கண்டிப்பா டிஃபெக்ட்டுதான்னு தோனுது, a delicate position. 😏
எனிவே மக்களே, நல்ல பென்சில் தேடுறவங்க நம்பி வாங்கலாம், வாங்கினதும் பூ மாதிரி பாத்துக்கணும். பெஸ்ட் பை லிங்க்ஸ் கீழே..






21 Jul 2017

நண்பேன்


பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்த சமயம், நீ வாங்கின மார்க்குக்கு கூடவெல்லாம் வந்து காலேஜ்ல சீட்டு கேக்க முடியாது நீங்களே எதாவது ஒரு காலேஜ்ல போயி ஃபார்மெல்லாம் வாங்கி போட்டுகோங்க, சீட்டு கெடச்சுதுன்னா வந்து சொல்லுங்க ஃபீசு பணம் மட்டும் கொடுக்குறோம் என்று வீட்டில் சொல்லிருந்தார்கள்.
.
நானும் என் நன்பனொருவனும் திருச்சியில் ஜோசப், ஜமால், பிஷப் அப்புறம் நேஷனல் என்று ஒவ்வொரு காலேஜாக போகலாமென்று முடிவு பண்ணியிருந்தோம். முதலாவதாக நாங்கள் ஃபார்ம் வாங்கச்சென்ற காலெஜ் ஜோசப், மெயின் கேட்டிலிருந்து ஒரு நூறு இருநூறு மீட்டர் தாண்டியதும் நாங்கள் முதலில் பார்த்தது அந்த காலேஜின் டாய்லெட். பார்த்துவிட்டு பக்கத்திலிருந்தவனை பார்த்தால் ஆளை காணவில்லை, வினாடி நேரத்திலேயே அந்த டாய்லெட்டின் வாசல்வரை சென்றிருந்தான்.
.
உள்ளே சென்று ஓரிரண்டு நிமிடம் கடந்து வெளியே வந்தவனிடம் ஏண்டா அவ்ளோ அர்ஜெண்டா? என கேட்கலாமென்றிருந்தேன். ஆனால் அதற்கு முன்னமாக, வந்த மறுகணமே 'அப்பாடா அப்துல் கலாம் ஒன்னுக்கு போன டாய்லெட்ல நானும் ஒன்னுக்கு போயிட்டேண்டா!!' என்றான், ஒருநிமிடம் புல்லரித்துவிட்டது. இன்று அவன் போன்ற நண்பர்கள் அருகில் இல்லாததாலோ என்னவோ வாழ்கை தேமேவென நகர்கிறது. 

14 Jul 2017

பல்சர் 220

அது ஒரு பல்சர் 220, ஒரு 60கிமி வேகமிருக்கும் அன்றும் என்னை கடந்துசென்றது, ஏற்கனவே ஒருமுறை ஓ.எம்.ஆரிலும், ஒருமுறை பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் ரோட்டிலும் பார்த்திருக்கிறேன். பேக் ச்சேஸிலிருக்கும் ஃபெண்டர் நீக்கப்பட்டிருக்கும். ஒரிஜினலாகவே அந்த வண்டிக்கு தனியாக மட் குவார்ட் இல்லாததாலும், கூடவே இந்த ஃபெண்டர் நீக்கப்பட்டிருப்பதாலும் எப்போது பார்த்தாலும் சட்டென கவனத்தை ஈர்த்துவிடும். கூடவே அந்த பல்சருக்கே உரித்தான அந்த தடித்த சைலன்சரும் அதன் பின்புறத்தை இன்னும் பிரமாண்டமாக காட்டும். வெறும் பெயருக்காக சின்னதொரு நம்பர் பிளேட் மாட்டப்பட்டிருக்கும். அந்த வண்டியில் செல்பவனை பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அடுத்தடுத்து வண்டிகளை கட் செய்து போகையில் பார்க்க ஒரு விதமாய் அம்சமாய் இருக்கும்.

எனக்கும்தான் அதுபோல சின்னதொரு மோட் செய்து ஓட்டவேண்டுமென்றுதான் ஆசை. ஆனால் இந்த மழைக்காலத்தை பார்த்துதான் பயம், வண்டிக்கு பின் வருபவரின் முகத்தில் சேற்றை வாரியடிக்க விருப்பமில்லை. உண்மையாக இதுபோன்ற சின்ன சின்ன மோடிஃபிகேஷன்களை செய்ய நினைக்கையில்தான் நம்மூரின் சாலைகளை எண்ணி கோபம் வரும். மட் குவார்டை நீக்குவதற்காவது இப்படிச்சில சங்கடங்கள் இருக்கிறது, ஆனால் இந்த சாரி குவார்ட் என்கிற ஒரு வஸ்து இருக்கிறதல்லவா? அது மோசம்!. அது இருப்பதிலும் எந்த உபயோகமுமில்லை, அதை எடுப்பதிலும் எந்த சங்கடமுமில்லை, ஆனாலும் நிரந்தரமாய் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது

2 Jul 2017

ஜி

கொஞ்சம் வருசம் முன்னால எம்.எல்.எம் மார்கெட்டிங் பயங்கரமா இருந்தப்போ 'யூ கேன் வின்' போன்ற புத்தகங்கள வாங்கி வச்சுகிட்டு, எப்டியாச்சும் வாழ்க்கைல பெருசா சம்பாரிக்கனும்னு எதாவது ஒரு எம்.எல்.எம் கம்பெனில பொருளவாங்கிட்டு இல்லனா பணத்தகட்டிட்டு, நமக்குகீழ யாரயாவது சேத்து விட்டுடனும்னு சில அன்பர்கள் பித்து பிடித்தது போல் திரிந்துகொண்டிருந்தார்கள்.

மதியம் ரெண்டு மணியானாலும் சரி, சாயங்காலம் ஆறு மணியானாலும் சரி, ராத்திரி ஒன்பது மணியானாலும் சரி இன்னும் எந்த நேரமானாலும் ஃபோன் செய்து "ஜி குட்மார்னிங் ஜி.." என ஆரம்பிப்பார்கள். இப்போ என்ன டைம் ஆகுது, ஏங்க இப்டி குட்மார்னிங் சொல்லுறிங்கனு கேட்டா குட்மார்னிங்'ன்ற வார்த்தைல ஒரு எனர்ஜி இருக்கு ஜி என்பார்கள், கூடவே ஜி எப்பொ ஜி செஸ்ஷன் வர்ரீங்க? என்பார்கள். கெட்டவார்த்தைகள் பேசக்கூடாது என்பதால் மூடிக்கொண்டிருந்த காலம் அது.

இந்த 'ஜி'ன்ற வார்த்தையை என்னோட கெட்டவார்த்தை அகராதியில் சேர்த்ததற்க்கு ஆர்.எஸ்.எஸ் சங்கிக்கள் தவிர்த்து, இந்த எம்.எல்.எம் மங்கிக்களும் ஒரு காரணம்!

14 Jun 2017

ஆர்.எஸ்.எஸ் ஜந்துக்கள்

பத்து வயது பையன் ஒருத்தன் அறுபது வயதுடைய பெட்டிக்கடை காரரிடம் இவ்வாறாக கேட்கிறான் "தாத்தா எனக்கு இது கொடுங்க!", அதுக்கு அவரிடமிருந்து இவ்வாறா பதில் வருவதா வச்சிக்குவோம் "ஏய், உங்கப்பன் எனக்கு பொறந்தானா? இல்ல உங்கம்மா எனக்கு பொறந்தாளா? ஒழுங்கா என்ன வேணுமோ அதமட்டும் கேளு!", இவை போதும் அந்தப்பையனின் எண்ணங்களை சிதைக்க.

நான் காலேஜ் படிக்கும்போது, ஊரில் யோகா மற்றும் சிலம்பம் சொல்லித்தரும் மாஸ்டராக 'ஜி' என்கிற பெயரில் சில ஆர்.எஸ்.எஸ் ஜந்துக்கள் இருந்தன. சிலம்பம் & யோகா கற்க வரும் சிறுவர்களிடத்தில் 'இந்தியா நம் பாரதமாதா, நம் தாய் வழியில் பிறக்காத முஸ்லிம்கள் இங்கே வாழ்வதும் அவர்களோடு நாம் வாழ்வதும் அறுவருக்கத்தக்கது'ன்ற ரேஞ்சில் உளரல்களை அள்ளித்தெளித்து வந்தனர். என்னிடமே ஒருமுறை 'தம்பி எந்த காலேஜ்?' என ஒரு ஜந்து கேட்க நான் 'ஜமால்' என்றேன், 'ஏன் தம்பி போயும் போயும் அவிங்க காலேஜ் தானா கெடச்சுது'னு அடுத்த கேள்வி கேட்க 'ஆமா அல்கொய்தால சேரலாம்னு இருக்கேன் அதான் அங்க படிக்கிறேன்'னு சொல்ல நெனச்சும் சொல்ல முடியாம 'ஆமா அங்க தான் சீட் கொடுத்தாங்க'னு சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

இன்றைய சினாரியோக்கு வருகிறேன், கூட படிச்ச சில நண்பர்கள் இதுபோன்ற ஜந்துக்களால் இன்று முழுநேர தேசபக்திப்பதர்களாக மாறி நிட்கிறார்கள், அவர்களிடத்தில் எந்த விதத்திலும் வாதம் செய்ய இயலாது, அவ்வாறாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். கொஞ்சம் பக்குவப்பட்டிருந்த அவர்களுக்கே இந்த நிலையானால் என் கவலையெல்லாம் அன்று யோகாவும் சிலம்பமும் கற்கச்சென்ற சிறுவர்களை எண்ணித்தான்.

21 May 2017

Graphite drawing tools - my pouch


என் காட்டிலிருக்கும் மரங்கள் 😉

ரொம்ப நாள் யோசனை, என்ன பென்சில் யூஸ் பண்ணுவிங்க, என்ன டூல்ஸ் யூஸ் பண்ணுவிங்கனு கேட்டவங்களுக்கு, விடியோவாவே எடுத்து போட்டுறுக்கேன் பாருங்க. என்கிட்ட இருக்ற மூனு பென்சில் பவுச்ல இருந்து ஒன்ன மட்டும் காட்டிருக்கேன் இதுதான் அடிக்கடி யூஸ் பண்றது. மீதி இருக்றதெல்லாம் கொஞ்சம் கேப் விட்டு ஷேர் பண்றேன்
.

14 Apr 2017

தேசியவியாதி+1


கதவை பூட்டினேனா இல்லையா என்ற சந்தேகம், வாரத்தில் ஒருநாளேனும் வரவில்லையானால் அதுதான் ஆச்சர்யம், அப்படி ஒரு தேசிய வியாதி அவனுக்கு.


திருநாளாய் இல்லாத அந்த ஒருநாளும் அப்படித்தான் கதவை பூட்டியது நினைவில்லை. வீட்டைவிட்டு ஒரு கிலோமீட்டர் நடந்து கடந்துவிட்டான், திரும்பிச்சென்று பார்க்க வெயிலின் உக்கிரம் அனுமதிக்கவில்லை.

மணிக்கொருமுறை இந்த யோசனை வருவதும் போவதுமாக அந்தநாள் கடந்தது. சாயங்காலம் அவசர அவசரமாய் வீடு திரும்புகையில்தான் பூட்டைபூட்டி சாவியை வெளிச்சுவரின் ஷெல்ஃபின் மேல் வைத்தது நியாபகம் வந்தது. மறதி என்னும் வியாதியிலிருந்து விடுபட்டதாய் எண்ணி ஒரு நிம்மதிப்பெருமூச்சிற்குப்பின் சாவகாசமாய் இருந்தது அவன் நடை.

பிறகு வீடுதிரும்பி ஷெல்ஃபிலிருந்து சாவியை எடுத்ததும்தான் கவனித்தான் தாழ்பாளிடாமலே வெறும் கொண்டியில் தொங்கிக்கொண்டிருந்தது அவன் பூட்டிய அந்த பூட்டு!. ஒரு தேசியவியாதியால் அனுதினம் அவதிப்பட்டவனுக்கு இனி இன்னுமொரு கூடுதல் வியாதி.

15 Mar 2017

பீச்சாங்கை


இரவு நேரங்களில் எவருக்கும் தன் பைக்கில் லிஃப்ட் கொடுத்து பழக்கமில்லை அவனுக்கு. நைட் ஷிஃப்டில் வேலைக்குச்செல்வதால், வழக்கம் போலவே இரவு இரண்டு பணியளவில் ஆஃபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.

ஆஃபிசிலிருந்து கிளம்பி மெயின் ரோட்டில் ஒரு கிலோமீட்டர் கடக்கையில் பஸ் ஸ்டாப் ஓரம் ஒருவர் லிஃப்ட் கேட்டு கைகளை நீட்டிக்கொண்டிருந்தார். கவனித்தபோது அவரின் முகம் அவனுக்கு அவ்வளவு தெளிவாக தெரியவில்லை.

'சரி லிஃப்ட் கொடுப்போமே' என நினைத்து இடதுகை க்ளட்சை பிடித்து நிருத்த முற்படுகையில், பைக் ஹெட்லைட் வெளிச்சத்தில் அந்த நபரின் மூக்கும் கண்ணும் அவர் ஒரு நார்த் இந்தியன் என்பதை காட்டிக்கொடுக்க, அடுத்தகணம் வடதுகை ஆக்சிலேட்டரை முறுக்கிவிடுகிறது.

எனினும் அடுத்த 4 கிலோமீட்டரில் ஒரு கண்ஸ்ட்ரக்சன் கிரவுண்ட் அருகில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடம் வந்துவிடம் ஆக அந்தநபரை நம்பலாம் என நினைத்து மறுபடியும் இடதுகை க்ளட்ச்சை பிடிக்க, மறுகணமே வட இந்தியர் ஒருவர் லிஃப்ட் கொடுத்த ஒருவரின் கழுத்தையே அறுத்து, பர்ஸையும் லேப்டாப்பையும் கொள்ளையடித்ததாய் எங்கோ படித்த செய்தி ஒன்று நியாபகம் வர, ஒரேயடியாய் ஆக்சிலேட்டரை முறுக்கிய கை, வீட்டை அடைந்ததும்தான் ஆசுவாசம் அடைந்தது.

அவன் செய்த அந்தச்செயல் தூங்கவிடாமல் மனஉளைச்சலை அதிகப்படுத்திக்கொண்டிருக்க, "இந்த இரவுதான் எத்தனை இறக்கமற்றது" என தன் டைரில் எழுத முற்படுகையில் "த்தா பயந்தாங்கோலி நாயே!!" என எழுதிமுடித்தது அவன் பீச்சாங்கை.

5 Feb 2017

ஹோலி ஷிட்


ஆஃபிஸ்ல சேர்ந்தப்போ எங்க பேட்ச்சுக்கு fluency இன்ஸ்ட்ரக்டர் ஒருத்தர் இருந்தார், அந்தாளு கொஞ்சம் வித்யாசமான தற்பெருமைவாதி. தன்னைப்பத்தி சொல்லிக்கொள்ளும்போது, "நானெல்லாம் படாத கஷ்டமில்ல, பார்க்காத வேலையில்ல எல்லாத்தையும் பாத்துட்டுதான் இப்போ இந்த நெலமைல இருக்கேன்!, எனக்கு தண்ணி தம்முனு எல்லா பழக்கமும் இருக்கு, ஆனாலும் என்ன ஒரு பொண்ணு வெரட்டி வெரட்டி லவ் பண்ணிகிட்டுதான் இருக்கா!" அப்டி இப்டின்னு இன்னும் என்னென்னவெல்லாமோ மேடைல பேசி கடைசியா, ஆஸ்கர் அவார்டு வாங்கின டி'காப்ரியோ கணக்கா "Yes i'm a shit... and I'm a Holy shit" அப்படின்னு சொல்லிட்டு பல்லிளிப்பார். எல்லா பயபுள்ளைங்களும் அப்டியே அவரு பேச்சுல மெய்மறந்து சில்லரையெல்லாம் விட்டெரிஞ்சாங்க.

மேட்டர் ஒண்ணே ஒண்ணுதான் அந்தாளு என்ன பேசினாலும், என்ன பொய் சொன்னாலும் கடைசியா சொன்னாரு பாருங்க ஒரு லைன் "Yes i'm a shit... and I'm a Holy shit" அதுலதான் எல்லாரும் அவுட்டு, சேத்துல மலர்ந்த செந்தாமரையா காட்டிக்கிறாராம். சேறு ஓக்கே, ஷிட்டு எப்படி? அதுவும் ஹோலி ஷிட்? ஹோலி ஷிட்டுன்னா மட்டும் மணக்கவா செய்யும்!? இதையேதான் அப்படியே ஆர்.எஸ்.எஸ்'ல இருப்பவர்களும் பிரதிபலிக்கிறார். அவர்களை பொறுத்தவரை இங்கு அவர்களின் சாதி என்பது ஹோலி ஷிட், அதன் மணத்தில் லயித்துதான் கிடப்பார்கள்!! :/

29 Jan 2017

பாஷா, மாணிக் பாஷா - காந்தி, மகாத்மா காந்தி


காந்தி ஒரு சிறையின் அறையில் பூட்டப்பட்டு கிடக்கிறார், ஒரு சமயம் பிரிட்டிஷ் காவலன் ஒருவனால் பூட்ஸ் காலாலேயே மிதிக்கப்பட்டு, "எலும்பும் தோலுமா இருந்துகிட்டு பிரிட்டிஷ் காரர்களையே எதிர்க்கிறாயா கிழவா! இங்கயே உன்ன கொன்னு போட்டாக்கூட கேக்க ஆள் கிடையாது!" அப்படினு மிரட்டப்படுகிறார்.

உடனே காந்தி, "கொஞ்சம் அப்டியே ஜன்னலுக்கு வெளியே பார்" என்று அவனிடம் சொல்கிறார், வெளியே பல லட்சம் பேர் காந்திக்காக காத்திருப்பதை கண்டு மிரண்டு போகிறான் அந்த பிரிட்டிஷ் காவலன்.

இது சின்ன வயசுல எங்க அம்மாச்சி காந்தி பத்தி எனக்கு சொன்ன கதைகள்ல ஒன்னு. அதுசமயம்தான் பாஷா படம் ஊர்ல இருந்த பஞ்சாயத்து டிவி'ல பாத்திருந்ததால "கொஞ்சம் அப்டியே ஜன்னலுக்கு வெளியே பார்"னு காந்தி சொன்னதா எங்க அம்மாச்சி சொன்னப்போவெல்லாம், ரஜினி பாஷா படத்துல கூலர கழட்டிட்டு ரகுவரன்கிட்ட "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா"னு சொல்லிட்டு 'பாஷா, மாணிக் பாஷா'னு சொல்லுவார் இல்லையா அந்தமாதிரி காந்தியும் 'காந்தி, மகாத்மா காந்தி'னு சொல்லியிருப்பாரோன்னு கற்பனைஎல்லாம் பண்ணி வச்சிருந்தேன். கொஞ்சம் வளந்ததுக்கு அப்புறமாதான் இந்த சமூகம், அவரு பேரு 'மகாத்மா காந்தி' இல்ல 'மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி'னு சொல்லி என் கற்பனையவெல்லாம் உடைச்சிருச்சு!

8 Jan 2017


A Girl with two elegant ornaments 

Graphite pencils on papers

Tools Used     Koh-i-noor(8b,6b)
                       Steadtler(4b,2b,h)
                       Brustro Paper(200gsm a3)
Duration         10+ hours

5 Jan 2017

போஹா லைஃப்-ஸ்டைல்/ஃபேஷன்



போஹோமியன் லைஃப்-ஸ்டைல்/ஃபேஷன் பத்தி பார்க்கும் முன்னால, ஹிப்பி எந்த இடத்துல போஹாவிடமிருந்து வித்தியாசப்படுதுனு பார்த்தோம்னா அது அழகியல். முன்னமே ஒரு பதிவுல சொன்னதுபோல, 'பிடிச்சா ட்ரெஸ்ஸ போட்டுக்குறதும், பிடிச்ச ட்ரெஸ்ஸ போட்டுக்குறதும்' ஹிப்பி ஃபேஷனுக்கு எளிமையான விளக்கம் (இப்படித்தான் இருக்கணும்ன்ற பொது மனப்பான்மையை உடைக்குமிடமிது). இதன் வாழ்வியலும் முழுக்க முழுக்க பொதுமனப்பான்மைக்கு எதிரானது, பாலினத்தை கடந்தது, போருக்கு எதிரானது, இயற்க்கைக்கு ஆதரவானது, அரசியல் கருத்துக்களால் வளர்ந்தது, ஆக அழகியலின் வீச்சு முழுமையாக இருக்காது.

இப்போ போஹோக்கு வருவோம், போஹோமியன் ஃபேஷனும் பொதுமனப்பான்மைக்கு ஆப்போசிட்டானதுதான். ஆனால் இதன் வாழ்வியலும், உடைகளும் அழகியல் சார்ந்தது. கொஞ்சம் சில்க், கொஞ்சம் மெட்டல், கொஞ்சம் மினிமலிசம், கொஞ்சம் கிரியேட்டிவ், கொஞ்சம் வின்டேஜ், கொஞ்சம் மாடர்ன் என கலந்துகட்டிய ஏஸ்த்தட்டிகள் லைஃப்ஸ்டைல் அது. ஒரு வருஷம் முன்னால வந்த மலையாள மூவி சார்லி'யின் முதன்மை கேரக்ட்டர்களின் காஸ்டியூம்களுக்கான ரெஃபிரன்சும் நிச்சயம் போஹா ஃபேஷனாகத்தான் இருக்கனும். காரணம் வழக்கமான உடையிலிருந்து மாறுபட்டுமட்டுமில்லாம அழகாகவும், உடுத்தியிருப்பவருக்கு செம கம்ஃபர்டபுளாகவும் இருக்கும், அதுதான் போஹோவின் விஷேசமே.

என்னதான் நாளும் விதவிதமா இந்த ஃபேஷன் வளர்ந்து வந்தாலும், வழக்கம் போலவே இதிலும் ஆண்களுக்குனு அவ்வளவா யாரும் மூளைய செலவழிக்கல, காரணம் போஹா அதிகம் ஃபெமினிசம் சார்ந்தது, இதில் ஆண்களுக்கென்று தனித்த வடிவமைப்புகள் கிடையாது. அப்புறம் எங்கன அழகியல்!?. ஆக என்னதான் தேடு தேடுன்னு தேடினாலும் நமக்குன்னு வித்யாசமான, அழகான ஆடைகள் கிடைக்கப்போறது இல்ல, அப்படியே கிடைச்சாலும் நாமளும் எதுவும் ட்ரை பண்ணப்போறதும் இல்ல, ஆக வழமை போலவே ஒரு வெள்ள வேஷ்டியும், கலர் சட்டையும் எடுத்து பொங்கலை கொண்டாட ஆயத்தமாவோம்!. 

பி.கு: என்கிட்டே இருக்குற போஹா லைஃப்சடையில் சம்பந்தமான ஃபோட்டோக்கள்ல எதை ஷேர் செய்யுறது எதை விடுறதுனே தெரியல, அவ்வளவும் அவ்வளவு அழகு. சோ ஹெல்ப் யுவர்செல்ஃப். கூகுள் வேலைக்கு ஆகாது, பின்டெரெஸ்ட் சாலச்சிறந்தது. :)