17 Dec 2017

15வது சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவல்-மூன்றாம் நாளில் ஒரு ராமன் ராகவ்


நேற்று சாயங்காலம் 'ஹார்ட்ஸ்டோன்' படம் பார்ப்பதற்க்காக கேசினோவில் அமர்ந்திருந்தேன். படம் ஆரம்பிக்க பத்து நிமிடமிருந்தது 'ஹாய் அயம் ராமன்..' என்றவாறே ஒரு கேரக்டர் அறிமுகமாகிக்கொண்டு பக்கத்தில் வந்து அமர்ந்தது, வயது 65 முதல் 70ற்க்குள் இருக்கும். 'நீங்க ஃபில்ம் இண்டஸ்ட்ரீல இருக்கிங்களா?' என்றார் 'இல்ல சார் நான் ஒரு ஐடி கம்பினில வொர்க் பண்றேன்' என்றேன். 'ஓ வெரி நைஸ் நான் கூட பேங்க்ல வொர்க் பண்ணினேன் எனக்கும் சினிமாலாம் ஒன்னும் தெரியாது அயம் ஜஸ்ட ஃபேன். அய்ம எக்ஸ்-பேங்கர், வி.ஆர்.எஸ் வாங்கிட்டேன், கொல்கத்தா பூனேன்னு அலையவிட்டா, இது நமக்கு சரிபட்டு வராதுன்னு வேலைய விட்டுட்டேன். இப்போ வீட்டுல சும்மாதான் இருக்கேன், வீட்டுல தண்ணிதெளிச்சு விட்டுட்டா அதான் டெய்லி ஃபெஸ்டிவல்க்கு வந்து படம் பாத்துண்டு போறேன்' என்றார். பதிலுக்கு 'நல்லதுங்க சார்' என்றேன்.

ஒரு இரண்டு மூன்று செகண்ட் கேப் விட்டு மீண்டும், 'இதுவரைக்கும் பார்த்ததுலயே எந்த படம் பெஸ்டுனு நீங்க ஃபீல் பண்றேள்' என்றார், 'நேத்திபாத்த நோ டேட் நோ சைன் அப்புறம் இன்னைக்கு பாத்த லைஃப் இஸ் லவ்லி' என்றேன் 'ஓ.. ரெண்டையுமே நல்ல படம்னு படம் பாத்த சில லேடீஸ் பேசின்ருந்தா, ப்ச், மிஸ் பண்ணிட்டேன் ரீ-ஷோ இருக்கா?' என்றார் 'தெர்ல சார் ச்செக் பண்ணனும்' என்றேன், உடனே கையிலிருந்த புக்லெட்டில் தேட ஆரம்பித்தார். மீண்டும் சற்று நேரத்திலேயே 'அண்ணா தியேட்டர் வாட்ச்மேண்ட பேசிட்ருந்தேன் அவன்டயும் இப்டிதான் எந்த படம் நல்ல மடம்னு சொல்லுறாங்கன்னு கேட்டேன் அவன் நைட்டு போடுற செக்ஸ் கவ்பாய்னு சொல்லிட்டு நமட்டு சிரிப்பு சிரிச்சான் அதுலயே புரிஞ்சுண்டேன்.., இந்த காலத்துல எல்லாம் சாதாரணமா போச்சு ஃபோன்ல செக்ஸ்னு டைப் பண்ணாலே எல்லாம் வருது அப்போலாம் அப்டி இல்ல!' என்றார், பதிலுக்கு 'அமா சார்' என்றேன்

இப்படியே தொனதொனவென பேசிக்கொண்டே போனார், முன்னமாக காலையில் 'லைப்ஃ இஸ் லவ்லி' படம் பார்த்திருந்ததால் அவரை எந்த விதமான ஜஸ்டிஃபையும் செய்ய மனம் ஒப்பவில்லை, சரி பேசிவிட்டு போகட்டும் என்ற மனநிலையில் இருந்தேன். பிறகு கேசினோ தியேட்டரை பற்றி பேசத்துவங்கினார், 'எல்லா தியேட்டர்லயும் அடுத்தவா தலை மறைக்கும் ஆனா கெசினோல மட்டும் மறைக்கவே மறைக்காது பாத்தீங்களா ஃப்ளேர் எப்டி க்கர்வா இருக்குன்னு, ஸ்க்ரீன கூட ஒரு பத்து பதினஞ்சு வருசத்துக்கு முந்தி ஒரு 15 ஃபீட் முன்ன கொண்டு வந்துட்டா, அப்போலாம் ஸ்கீர்ன சுத்தி டிசைன் இருக்கும், செண்டர்ல ஒரு தேவதை இருக்கும் அவகிட்ட இருந்து ரெண்டு பிலிம் ரோல் மாலைமாதிரி வந்து ஸ்கிரீனோட ரெண்டு பக்கமும் விழும் அந்த இடத்துல ரெண்டு பொண்கொழந்தைங்க இருக்கும், அருவி மாதிரி பெயிண்ட் பண்ணிருப்பா சும்மாவா 1936ல கட்டின தியேட்டர் இது அப்போலாம் அப்டி இருக்கும்' என பேசி முடித்தார்.

கொஞ்ச நேரத்தில் 'ப்ளடி மில்க்கோட க்ளைமேக்ஸ்ல என்னாச்சு?, பாக்கவே முடியல, அவன சேஃப் குவார்ட் பண்ணுறதுக்காக பசுமாட்டையெல்லாம் புடிச்சு அடிச்சு கொண்ணு ப்பா ரெண்டாவது மாட்ட சுடுறப்போவே நான் வெளில போயிட்டேன்' என்றார். 'நல்ல வேல சார் வெளில போயிட்டீங்க மிச்சமிருந்த எல்லா மாட்டையும் கவெர்ன்மெண்டே கொண்றுச்சு!' என்றேன். 'கவெர்மெண்டேவா கொன்னுச்சு! பாவம், எப்டி இருந்தாலும் அந்த நோய்லயே எல்லாம் செத்திருக்கும், அப்ப அவன் காப்பாத்ததான் நெனச்சுருப்பான் போல..' என அவர் சொல்லிமுடிக்க சரியாக தேசியகீதம் ஆரம்பித்தது.

'ஃபெஸ்டிவல்ல ஃபர்ஸ்ட் ஷோல மட்டும் நேஷனல் ஆன்தம் போடலாம், எல்லா ஷோவுக்கும் தேவ இல்லனு ஃபீல் பண்றேன், வயசானவால்லாம் எப்டி எழுந்து எழுந்து உக்காருவா' எனச்சொல்லி அமர்ந்தார். பேசியே படம் பார்க்க விடமாட்டார் என்றுதான் நினைத்திருந்தேன். நல்லவேலை படத்தின்போது அவர் எதுவும் பேசவில்லை, பிறகு ஹார்ட்ஸ்டோனிலும் பாதியிலேயே கிளம்பிவிட்டார். அவர் பேசியதெல்லாம் வைத்து பார்க்கையில் அவர் 'எனக்கு வந்தா ரத்தம் உனக்கு வந்தா தக்காளி சட்னி' ரகம் என தெரியவந்தது.
#15thCIFF #Day3

No comments:

Post a Comment