14 Apr 2017

தேசியவியாதி+1


கதவை பூட்டினேனா இல்லையா என்ற சந்தேகம், வாரத்தில் ஒருநாளேனும் வரவில்லையானால் அதுதான் ஆச்சர்யம், அப்படி ஒரு தேசிய வியாதி அவனுக்கு.


திருநாளாய் இல்லாத அந்த ஒருநாளும் அப்படித்தான் கதவை பூட்டியது நினைவில்லை. வீட்டைவிட்டு ஒரு கிலோமீட்டர் நடந்து கடந்துவிட்டான், திரும்பிச்சென்று பார்க்க வெயிலின் உக்கிரம் அனுமதிக்கவில்லை.

மணிக்கொருமுறை இந்த யோசனை வருவதும் போவதுமாக அந்தநாள் கடந்தது. சாயங்காலம் அவசர அவசரமாய் வீடு திரும்புகையில்தான் பூட்டைபூட்டி சாவியை வெளிச்சுவரின் ஷெல்ஃபின் மேல் வைத்தது நியாபகம் வந்தது. மறதி என்னும் வியாதியிலிருந்து விடுபட்டதாய் எண்ணி ஒரு நிம்மதிப்பெருமூச்சிற்குப்பின் சாவகாசமாய் இருந்தது அவன் நடை.

பிறகு வீடுதிரும்பி ஷெல்ஃபிலிருந்து சாவியை எடுத்ததும்தான் கவனித்தான் தாழ்பாளிடாமலே வெறும் கொண்டியில் தொங்கிக்கொண்டிருந்தது அவன் பூட்டிய அந்த பூட்டு!. ஒரு தேசியவியாதியால் அனுதினம் அவதிப்பட்டவனுக்கு இனி இன்னுமொரு கூடுதல் வியாதி.