16 Feb 2016

முழுமை


அவனுக்கென சொந்தமாக ஒரு ஆம்புலன்ஸ் இருக்கிறது, அது ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட ஒரு ஆம்னிவேன். தினமும் விடியற்காலையிலேயே எழுந்து குளித்துமுடித்து தன் துணையாள் எழும்பும் வரைக்கும் காத்திருப்பான், அவள் எழும்பியபின் காப்பி போடுவதுமுதல், மகனை ஸ்கூலுக்கு கிளப்புவதுவரை எல்லாவேலையையுமே இருவருமாக சேர்ந்து செய்வதுதான் வழக்கம். தினமும் இது வழக்கமென்றாலும் எல்லாமுமே ஒரு எமெர்ஜென்சி ஃபோன்கால் வரும்வரைதான் நீடித்திருக்கும். எப்பவுமே இருவரும் மனதளவில் கொஞ்சம் தயாராகத்தான் இருப்பார்கள். ஃபோன்கால் வந்ததும், அவனுக்கு சட்டை மற்றும் சாவி எடுத்துகொடுத்து அனுப்பிவைப்பது அவளுக்கு வழக்கம். தினமும் சாமி கும்பிட்டாலும் ஒவ்வொருமுறை எமெர்ஜென்சிக்கு கிளம்பும்போதும் தன் நெற்றியில் இருக்கும் திருநீரை அழித்துவிட்டு கிளம்புவது அவனுக்கு வழக்கம், ஒவ்வொருமுறை கிளம்பும்போதும் மகன் வீட்டிலிருந்தால் முதலில் மகனை, அப்புறம் மனைவியை, கடைசியாக வீட்டிலிருக்கும் கடிகாரத்தை ஒரு கணம் பார்த்துவிட்டுதான் அவனது ஓட்டம் ஆரம்பிக்கும்.


அவன் இலக்கு இல்லாமல் வேகமாக பயணிப்பதில்லை, அவனுக்கென இரண்டு இலக்குகள். ஒன்று எமெர்ஜென்சி ஸ்பாட், இன்னொன்று ஹாஸ்பிட்டல். வேகத்தால் அவனுக்கு ஏதும் ஆக்ஸிடென்ட் ஆகிடாது என்ற நம்பிக்கை, அவன் ஆம்புலன்சஸில் ஏறி சைரனை ஆன் பண்ணினதும், மெயின்ரோட்டின் சப்தம் குறைவதிலேயும், வாகனங்கள் வழிவிட்டு நகருவதிலேயுமே இருவருக்கும் கிடைத்துவிடும். தவிற, தினசரி வழக்கமாகிப்போன இந்த வாழ்க்கை ஒருபோதும் சலிப்பை தந்ததில்லை. காரணம் இருவருக்குமான எதிர்பார்ப்புகள் குறைவு. அவளுக்கான அதிகபட்ச அன்பு காலையில் எழும்பி ஒரு ஃபோன்கால் வரும் வரைக்குமான அந்த இடைவெளியில் நிரம்பவே கிடைத்துவிடுகிறது. அவனுக்கான அன்பு இன்னும் குறைவு, கிளம்பும்போது அவள் கைகள் மூலம் சட்டையும், சாவியுமாகவே கிடைத்துவிடும். கூலிக்காகத்தான் எல்லா தொழிலுமே என்றாலும், இங்கு தினமும் வீடு திரும்பினதும் “என்ன ஆச்சு?” என்பதுதான் முதல்கேள்வியாக இருக்குமே தவிற “எவ்வளவு கிடைச்சது?” என்பதுவல்ல. எதிர்பார்ப்புகளையும், அன்பையும் முழுமைபடுத்தி வாழ்கின்றனர் அவளும் அவனும்.

No comments:

Post a Comment