7 Mar 2016

எண்ணச்சிதைவு

இருபது நிமிடம் விடாது பேசிய அவளின் வார்த்தைகள், அவன் காது வழியே பயணித்து மூளையில் பரவி பல யோசனைகளை தந்துகொண்டிருந்தது. என்ன பேசுகிறாள் என்றெல்லாம் யோசிக்க மனம் ஒத்துழைக்கவில்லை, எதோ ஒருநாள் இருநாள் என்றால் வார்த்தைகளின் சாராம்சத்தை விளங்கிக்கொள்ள முயற்சித்திருப்பான், தினமும் மணிக்கணக்காக தொடரும் அவளின் பேச்சு, அவனுக்கு தீராத்தலைவலியையும், எண்ணச்சிதைவையும் தந்துகொண்டிருந்தது. வாசலில் நீர் தெளிப்பதுபோல இடைவெளியற்று அடுத்தடுத்து பல விசயங்களை சொல்லிவிட்டு 'இப்போ நா என்ன சொன்னேன்சொல்லு?' என கேட்பாள் , அவன் சரியாகவே சொன்னாலும் 'அது இப்போ சொன்னது அதுக்கு முன்னாடி என்ன சொன்னேன் சொல்லு?' என கேள்விகளை அடுக்கிகொண்டே போவாள். அவள் தெளித்தவையெல்லாம் அவனிடத்தேதான் இருக்கின்றன, ஆனால் தொடக்கமும், முடிவும், இடையும் தெறியாது அவனுக்கு.

'நேத்து கனவுல உன்ன வேற பொண்ணுகூட பாத்தேன்!, ஏண்டா நீ என்ன எமாத்திடுவியா?' என கேட்டாள். அவனுக்கு அடிக்கடி வரும் ஒரு கனவு நியாபகம் வந்தது, ட்ரவுசர் போடாமலேயே ஸ்கூலுக்கு போவதுமாதிரியான ஒரு கனவு அது. சட்டென நினைவு மீள இப்போது அவளின் பேச்சு புதியதாக அவள் வாங்கியிருக்கும் டிரெஸ்ஸை பற்றி போய்கொண்டிருக்க, இன்னமும் வாங்கமுடியாமல் இருக்கும் ஒரு ப்ளாக் ஷர்ட் அவன் நினைவில் வந்து போனது. அடுத்து, தான் ஆஃபீசுக்கு போகும் வழியில் பார்த்த ஒரு ஆக்ஸிடெண்டை விளக்கிக்கொண்டிருந்தாள், அந்நேரத்தில் அவனுடைய நினைவு இதுவரை ஆக்சிடெண்டில் கை, கால் உடைத்துக்கொண்ட அத்தனை நண்பர்கள் மீதும் படர்ந்திருந்தது. இப்படியே அடுத்ததாக தனக்கும் அம்மாவுக்கும் நடந்த சண்டையை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள், நேற்று அம்மாவுக்கு ஃபோன் செய்ய மறந்தது அவனின் நியாபகத்திற்கு வந்துபோக போனைத்தேடினான் காணவில்லை. கடைசியாக எதோ ஒரு கால் பேச தன் கையில் ஃபோனை பார்த்ததுதான் அவனுக்கு நினைவிலிருக்கிறது, அப்புறம் எங்கே போனது என்பதன் நினைவு வரவேயில்லை. எங்கே 'போனை காணாம்' என்று சொன்னால் முன்னமே ஒருமுறை அவள் வாங்கிகொடுத்து தொலைத்த ஒரு மோதிரம் பற்றிய பேச்சை எடுத்து புலம்ப ஆரம்பிப்பாலோ என நினைத்து "எனக்கு கொஞ்சம் அர்ஜெண்ட் வொர்க் இருக்கு, கொஞ்ச நேரத்துல திரும்ப பேசுறேன்"னு சொல்லி ஃபோன் காலை கட் செய்தான்.

No comments:

Post a Comment