27 Sept 2015

கம்பெனி காசுகள்



என்னிடம் இருப்பதிலேயே ரொம்போ பழைய காசுகள் இவை இரண்டும் தான், ஒன்று டச்சு கிழக்கிந்திய கம்பெனியினுடையது(1790), இன்னொன்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினுடையது(1862). சில வருடங்கள் முன்னால பழைய காசுகள் சேகரிப்பதில் ரொம்ப ஆர்வமாக இருந்தபொழுது இந்த காசுகள் கிடைத்தன, அப்போவெல்லாம் பழைய காசுகளுக்காக நிறைய தெறிந்த நபர்களின் வீடுகளுக்கு செல்வதுண்டு, வீடுமுழுக்க தேடினாலும் அப்போது சமீபத்தில் செல்லாமல் போன ஐந்து, பத்து பைசாக்கல் தான் கிடைக்கும் வேறு உருப்படியான எந்த ஒரு காசும் கிடைக்காது. எனக்கு மட்டுமல்ல நாணயம் சேகரிக்கும் எவருக்குமே இந்த ஐந்து பத்து பைசாக்கள் சந்தோசத்தை கொடுப்பது இல்லை. 

அப்போது எனக்கு தேவையெல்லாம் சுதந்திரத்துக்கு முந்தய கால காசுகள்தான். என் சொந்தக்கார மாப்புள ஒருவனிடமிருந்துதான் இப்போது என்னிடமுள்ள முக்கால்வாசி காசுகள் கிடைத்தது தனி கதை, அவனின் வீட்டில் அந்த காசுகள் ஒரு தானிய பெட்டியில் இருந்தன. அவனுக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை என்பதாலும், நான் கேட்டுக்கொண்டதாலும் என்னிடம் கொடுத்தான், என் கணிப்புப்படி அந்த காசுகள் அவனின் தாத்தாவினுடையதாக இருக்கலாம், சைக்கிலுக்கு பஞ்சர் ஒட்டுமொரு இடம் அவனின் வீட்டிலிறுக்கும், பஞ்சருக்கு வாங்கிய காசுகளை அதே போன்றதொரு தானிய பெட்டியில் தான் சேர்த்துவைப்பார்கள், நெற்குறுதும் வீட்டிலிறுந்தது. உணவுக்காக பணம் செலவாகாததால் அந்த காசுகள் செலவாகாமலே இருந்திருக்கலாம் என்பதும் என் கணிப்பு.

சரி இந்த இரண்டு காசுக்கு வருவோம் இவை இரண்டில் பிரிட்டிஷ் இந்தியா விக்டோரியா ராணியின் ஒரு ரூபாய் காசு நண்பர் ஒருவரிடமிருந்து பெற்றது, மற்றுமொரு டச்சு கிழக்கிந்திய காசு, நாங்கள் இருந்த ஒரு பழைய காலத்து வீட்டின் கொள்ளையிலிருந்து கண்டெடுத்தது, ஆனால் கிடைக்கும் போது அது காசு என தெறியாது, அந்த அளவுக்கு அதில் துரு ஏறியிருந்தது. அது என்னவென்று தெறியாமல் விளைவாடுவதற்காக எடுத்து வைத்திருந்தேன். ரொம்ப நாட்களாக அது எங்க வீட்டு பாத்ரூமின் சிலாப்பிலேயே கிடந்தது. காசுகள் பற்றிய ஒரு பொசெஸ்ஸன் வந்ததும், எதார்த்தமாக பாத்ரூமிலிருந்த ஆசிட்டை ஒரு கிண்ணத்தில் நிரப்பி அதை மூழ்கச்செய்து பார்த்த பொழுதுதான் அது ஒரு காசு என்பதே தெறிந்தது, அந்த தருணத்தின் சந்தோசம் அற்புதமானது, என் ஊரிலேயே என்னிடம் தான் ரொம்போ பழையதொரு காசு இருக்கின்றது என்ற பெருமை கலந்த சந்தோசம்.

அதுபோன்றதொரு தருணமேதும் அதன் பின் நடக்கவில்லை. அதன் பின பழங்கால பொருட்களை தேடுவதும், அவற்றை மியூசியம்களில் பார்ப்பதும் பிடித்ததாக இருந்தது. இப்போதெல்லாம் அவை எதுவுமே இல்லை எல்லா பழைய பொருட்களையும், காசுகளையும் இண்டெர்நெட்டில் பார்ப்பதோடு சரி. காரணம் அதன் பின் இயங்கும் பெரிய போலிச்சந்தை. என்னிடமிருக்கும் காசுகளை பற்றி படிக்க கூகுள் செய்யும் போது பலவற்றை படித்தேன், இந்த பழம்பொருள்/காசுகள் சேகரிப்பின் மீது இருக்கும் மோகத்தின் காரணமாக மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், எவ்வளவு செலவு செய்கிறார்கள், எவ்வளவு ஏமாறுகிறார்கள் எவ்வளவு ஏமாற்றுகிறார்கள் என்பன போன்றவை அவை. சில சைட்டுகளும், சில தகவல்களும், சிலவற்றின் மதிப்புகளும் பெருத்த தலைவலியை கொடுத்தன அத்தோடு சேகரிப்பின் மீதிருந்த ஆசையை விட்டுவிட்டேன், பின்னர் தரவுகளை படிப்பதோடு மட்டும் சரி. இன்றுவரை தானாக கிடைக்கும் சில பழங்கால பொருட்களை வைத்துக்கொண்டு அவற்றை பற்றி தேடிப்படிப்பதோடு நிறுத்திக்கொண்டேன். காசுகளையும் பொருட்களையும் தேடுவதில்லை.

இன்னும் சொல்லப்போனால், மேற்சொன்ன இந்த ரெண்டு கம்பெனிகளும், அவற்றின் காசுகளும் இங்கு வராமலிருந்தாலே நன்றாக இருந்திருக்கும். இந்த கம்பெனிகள் நம்மை அடிமையாக்கின, நம் வளங்களை சுரண்டின, நம்மை பாழ் படுத்தின, இந்த காசுகளை பார்த்தாய் மனக்கண்ணில் நான் பார்க்காத கஷ்டகாலங்கள் தான் பிம்பங்களாக வருகிறது, மாறாக பழைய ஐந்து, பத்து, இருபது பைசாக்கள் பார்க்கும் போது, நான் உணர்ந்த மிட்டாயும், பெட்டிக்கடையும், ஸ்கூலும் தான் பிம்பங்களாக மலர்கிறது.

No comments:

Post a Comment