28 Oct 2015

அனுமன் படம் பதித்த அரிய கிழக்கிந்திய கம்பெனி காசு?



கொஞ்ச நாளுக்கு முன்னால் "நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?" அப்படின்னு சமஸ் எழுதின ஒரு கட்டுரையில், சிறுதெய்வ வழிபாடுகளை அழித்து பெருதெய்வ கோயில்களும், புதுபுது கோயில் கட்டிட பாணிகளும், தமிழக கடைகோடி ஊர்களில் முளைத்து வரும் இந்த புதிய கலாச்சாரத்தை கால மாற்றத்தின் தொடர்ச்சியாக பார்ப்பதா? இல்லை சங் பரிவார அமைப்புகளின் சல்லிவேர்கள் பரவுவதாக பார்ப்பதா? என ஐயம் வெளியிட்டிருந்தார். அதற்கு முன் காய்ன் கலெக்சன் குறித்தும் அதிலுள்ள போலி சந்தை மற்றும் பழம்பொருள் சேகரிப்பு மோகம் குறித்து நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். இவை இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்பது இந்த படங்களை பார்த்தால் சிறிது விளங்கும், நான் இன்னும் கொஞ்சம் விளக்குகிறேன்,

  ‘அனுமன் படம் பதித்த அரிய கிழக்கிந்திய கம்பெனி காசு' என்ற ஒன்றை பேஸ்புக்கில் ஒரு நியூமிஸ்மேட்டிக் குழுவில் பார்த்தேன், விலை ஒரு ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்று இருந்தது. அந்த அரியவகை காசுக்கு இந்த விலை கம்மிதான். கிழக்கிந்திய கம்பெனி காசுகள் குறித்து ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்ததால் சந்தேகமாக இருக்க தேடிப்பார்த்தேன், எனக்கு தெறிந்து எம்பெரர்களையும், ராஜ குடும்ப ஆட்களையும் கம்பெனி காசுகளில் பதித்த பெருமை பீத்தகரையன்கள்தான் அவர்கள் ஆனால், இந்தியாவில் இந்து கடவுள்களின் உருவங்களை பதித்து வெளியிடும் அளவுக்கு மூடர்கள் அல்லர்.

அந்த காலத்தில், சில கோவில் நிர்வாகங்கள், ‘கோவில் டோக்கன்-Temple Token' என்று ஒன்றை வைத்திருந்திருக்கின்றனர், தனியே டோக்கன் அடிக்க சோம்பேரித்தனமோ என்னமோ கிழக்கிந்திய கம்பெனி காசுகளை உருமாற்றம் செய்து உபயோகித்துள்ளனர், விருப்பம் போல வருடத்தையும் பதித்து உபயோகித்துள்ளனர், பெரும்பாலும் காசின் ஒரு பக்கத்தை மட்டும் மாற்றியமைத்து, அந்த பக்கத்தில் கடவுள் உருவங்களை பதித்து உபயோகித்துள்ளனர். ஆக மறுபக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் பெயர் இருக்கும். இதையே இப்போது, கிழக்கிந்திய கம்பெனியே இந்து கடவுளின் உருவங்களை பதித்து வெளியிட்டது எனவும், மிகவும் அரிதான காசு எனவும், சில வட இந்திய குழுக்கள் பகிர்ந்து வருகின்றனர். இதை வெறும் 'போலி சந்தை புரளி' என எடுத்துகொள்வதா? இல்லை காவி கும்பலின் சித்து விளையாட்டு என எடுத்து கொள்வதா? என விளங்கவில்லை. தெரிந்தே சிலர் இந்த டோகன்களை கிழக்கிந்திய கம்பெனியே வெளியிட்டது போல பதிவு செய்துவருவது சற்று அச்சமாகவே உள்ளது. ஏனென்றால் இது போன்ற டோக்கன்கள், 'பூஜை காசுகள்-Pooja coins' என்ற பெயரில் இன்றளவும் வாரணாசி, காசி போன்ற ஊர்களின் கோயில் தெருக்களின் கடைகளில் கிடைக்கின்றன, அதை புனித பொருளாக எண்ணி பூஜை செய்து பலர் பூஜை அறையிலும் வைத்து வருகின்றனர்.

ஆக இது போன்ற போலித்தனமான செய்திகளை, வெறும் பணம் சம்பாதிப்பதற்காக பதிவு செய்கிறார்கள் என எடுத்துகொள்ள முடியவில்லை, அதிலும் அண்மைகாலமாக, காவி கும்பல்களின் செய்கைகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையிலேயே உள்ளன. இதிலிருந்து இந்துத்துவ பெருமை பீத்தகரையர்கள் இன்னும் எதையெல்லாம் எடுத்து விளையாட போகிறார்கள் என அச்சமாவே உள்ளது. சமஸ் பதிவு செய்திருந்த அவரின் நண்பர் ஒருவரின் ஐயம், இன்னும் அதிர்ச்சியை கொடுத்தது, அதாவாது சமீபகால சாய் பாபா உருவசிலைகள் இப்போது மோடி போல இருக்கிறதாம்!

No comments:

Post a Comment