26 Jul 2015

பெயரற்று இருத்தலே மேல்


பெயரோடு இனிசியல் போடுவதில் ஒரு நிச்சயிக்கப்பட்ட வடிவம் இருக்கிறதாம். பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரு வடிவிலும், தமிழில் எழுதும் போது ஒரு வடிவிலும் எழுத வேண்டும். அதாவது பெயரை தமிழில் எழுதும் போது பெயருக்கு முன் இனிசியல் இருக்க வேண்டும் (நா. நாகராஜ் – நாராயணனின் மகன் நாகராஜ்). ஆங்கிலத்தில் எழுதும் போது பெயருக்கு பின் இனிசியலை எழுத வேண்டும் (Nagaraj N – Nagaraj son of Narayanan). இது, எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் தெளிவுபடுத்தியது.


அப்படியே சரியான வடிவில் எழுதிக்கொண்டிருந்த போது, அது எப்படி சரி ஆகும், “நீ உன் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தானே பொறந்தே!. ஏன் அப்பாவின் பெயரை மட்டும் சேர்க்கனும். காலாகாலமா இனிசியல்ல தந்தைவழி பெயர்கள் மட்டுமே நினைவுல வச்சிருக்கோம். ஆக நீங்களாவது உங்க காலத்துல புள்ளைங்களுக்கு, அம்மா அப்பா ரெண்டு பேரு பெயரையும் சேர்த்து பதியுங்க”னு இன்னொரு ஆசிரியர் தெளிவு படுத்தினார்.

அதுமுதல் பெயரோடு இரண்டு இனிசியல்களையும் சேர்த்து எழுத பழகியாச்சு. இப்போ காலெஜ், இன்னுமொரு ஆசிரியர், “ஏண்டா! உனக்கு தானடா பேரு வச்சாங்க அதுல ஏண்டா உன் அப்பா, அம்மா, தாத்தா’னு குடும்பத்து பேரஎல்லாம் சேக்குறிங்க, உங்க அப்பா அம்மாவ பெருமைபடுத்தனும்னா உன் பேருக்கு பின்னால அவங்க பேர போடனும்னு அவசியம் இல்ல. உருப்படியா வாழ்ந்தா அதுவே போதும்”னு தெளிவு படுத்தினாரு.

சரினு நம்ம பெயரை மட்டும் எழுதிட்டு இருக்குறப்போ, “நமக்கான பெயரை ஏன் சின்ன வயசுலயே அம்மா அப்பா வைக்கனும், ஏன் நாமலே வச்சுக்க கூடாது. அம்மா அப்பா வைக்கிறதனால அவங்களோட நாடு, மத, இன, சாதி, குடும்ப பெயரா அடையாளப்படுத்தப்படுது, கவர்ன்மென்ட் கெஸட்’ல இனி நம்ம பெயர மாத்துறதுக்கு நெறைய பணமும், நேரமும் செலவாகும். சோ பெர்த் சர்ட்டிஃபிகெட்ல இருக்குறது இருக்கட்டும். வெளிவுலகத்துக்கு தன்ன அடையாளப்படுத்த நமக்கான பெயர நாமலே தேர்ந்தெடுத்துகலாம். பெயரு எதுவா வேணா இருக்கலாம், அர்த்தம் இல்லாம கூட வைக்கலாம், இதுக்கு முன்னால உலகத்துல யாருமே வைக்காத பெயரக்கூட வச்சிகலாம், ஒன்னு தப்பு இல்ல, பெயர் என்பது ஒரு அடையாளம் மட்டுமே”னு சமூகத்துல பல ஆசான்கள் தங்களின் புனைப்பெயர்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆயினும், நாமே தேர்வு செய்யும் எந்த பெயரும் நமக்கு திருப்தியை தர போவது இல்லை. தேடல் இருந்து கொண்டேதான் இருக்கும். சிலரின் பெயர்களில், நமக்கு இருக்கும் ஈர்ப்பு, அவர்களுக்கு அவ்வளவாக இருப்பதுமில்லை, ஆக பெயரென்பது ஒரு அடையாளம், பெயரென்பது ஒரு அழைத்தல் குறியீடு அவ்வளவே, அதனால் பெயரை பற்றி யோசிக்காமல் வேறு எதாவது உருப்படியா பன்னலாம்னு தனக்கு தானே கொஞ்சம் தெளிவுபடுத்திகிட்டப்போ, “இந்த ஏலியன்ஸ்லாம் இருக்காங்கலா? இருந்தா அவங்களுக்கு பேரு இருக்குமா!, பேரு இருந்தா எப்படி இருக்கும்”னு யோசிக்குது இந்த மூளை!!.

No comments:

Post a Comment